ADDED : ஆக 21, 2026 05:41 PM
திருமங்கலம்: ரேஷன் கடைகளில் பொருட்களை விற்பனை செய்யும் போது ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகைகளை பதிவு செய்து பின்னர் பொருள்கள் வழங்கப்படும். இணைய சேவை முடக்கத்தால் கைரேகை பதிவு செய்யும் இயந்திரம் முறையாக வேலை செய்யவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை விற்பனையாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் செல்லத்துரை தலைமையில் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு கைரேகை பதிவு இயந்திரங்களை ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது. இதில் திருமங்கலம் பகுதி கடைகளை அடைத்து, ரேஷன் கடை ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாநிலத் துணைத் தலைவர் செல்லதுரை கூறியதாவது : 15 நாட்களுக்கும் மேலாக இணையதள சேவை முறையாக கிடைக்காததால் விற்பனையாளர்கள், பொதுமக்களிடையே வாக்குவாதம் நடக்கிறது. இது மன அழுத்தத்தை ஏற்படுத்துவதுடன், பொதுமக்களிடம் நற்பெயரை கெடுக்கிறது. இதனால் இந்த மாத விற்பனை சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் தீர்வில்லை. இணையதள சேவையை மேம்படுத்த கோரி கைரேகை பதிவு இயந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டம் நடக்கிறது என்றார்.
