/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துறை ரீதியான வழக்குகளை கையாள உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு பிரிவு அரசுப்பணியாளர்கள் முதல்வருக்கு வலியுறுத்தல்
/
துறை ரீதியான வழக்குகளை கையாள உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு பிரிவு அரசுப்பணியாளர்கள் முதல்வருக்கு வலியுறுத்தல்
துறை ரீதியான வழக்குகளை கையாள உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு பிரிவு அரசுப்பணியாளர்கள் முதல்வருக்கு வலியுறுத்தல்
துறை ரீதியான வழக்குகளை கையாள உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு பிரிவு அரசுப்பணியாளர்கள் முதல்வருக்கு வலியுறுத்தல்
ADDED : செப் 09, 2025 05:43 AM
மதுரை: உயர்நீதி மன்றங்களில் அரசுக்கு எதிரான வழக்குகளில் வாதாடுவதற்காக, அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு உதவும் வகையில் ஒவ்வொரு துறைக்கும் வரவேற்பு பிரிவு உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளது.
அரசு துறைகளில் பொதுமக்கள், அரசுப்பணியாளர்கள் என பலராலும் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. இவை விசாரணைக்கு வருவது குறித்து அத்துறையால் நியமிக்கப்பட்ட பணியாளர் ஒருவர் இந்த நாளில், இன்ன வழக்கு விசாரணைக்கு வருகிறது என துறை அதிகாரியிடம் தெரிவிப்பார்.
அந்த நாளில் துறை ஊழியர் ஒருவர் நீதிமன்றத்திற்கு தேவையான விவரங்களுடன் செல்வார். அவர் தங்கள் அரசு வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை நடத்துவார். அவரது ஆலோசனைப்படி துறை சார்பில் வாதிட உரை தயாரிப்பது, தேவையான நோட்டரி பப்ளிக் கையெ ழுத்துப் பெறுவது, எதிர்மனு தாக்கல் செய்ய, ஏதேனும் ஒரு வழக்கறிஞர் மூலம் மனுதயாரிப்பது, தொடர்ந்து அரசு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வது என செயல்படுவர்.
இதற்காக வழக்கறிஞர்களை காத்திருந்து சந்திப்பது, தேவையான டைப்பிங் உட்பட ஸ்டேஷனரி செலவுகள், கட்டணம் செலுத்துவது என சில ஆயிரங்கள் தேவைப்படுகிறது. இதனை நீதிமன்றம் செல்லும் துறை பணியாளரே செலவிடும் கட்டாயம் உள்ளது. இதனால் மனஉளைச்சல் ஏற்படுவதாக அரசுப் பணியாளர்கள் புலம்புகின்றனர்.
எனவே ஒவ்வொரு துறைக்கும் உயர்நீதி மன்றத்தில் தனி வரவேற்பு பிரிவு ஒன்றை உருவாக்கி, அதில் பணியாளரை நியமித்து அவர்கள், வழக்குகளை அரசு வழக்கறிஞருடன் இணைந்து கையாள வேண்டும். அதற்கான விவரங்களை மட்டும் அரசு துறை அனுப்பும் பணியாளர்கள் தருவர். அதை வைத்து வழக்குகளை கையாண்டால் காலம், நேரம் மிச்சமாகும். அந்தப் பணியாளரின் அலுவலகம் தொடர்பான பணிகளும் பாதிப்பின்றி நடக்கும் என்கின்றனர்.
அரசுப் பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ஜெயகணேஷ், மாவட்ட செயலாளர் முத்துராஜா, பொருளாளர் சேகர் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு பணியாளர்கள் துறை தொடர்பான வழக்குக்காக நீதிமன்றம் சென்றால் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர். பணமும் செலவு செய்ய வேண்டியுள்ளதால் வழக்குகளில் கவனம் செலுத்த தயங்குகின்றனர். உயர் அலுவலர்கள் இதற்கு தீர்வு காணாமல் கீழ்நிலை அலுவலர்களை நீதி மன்றம் செல்ல கட்டாயப் படுத்துகின்றனர்.
இதற்குரிய தீர்வு காண, உயர் நீதிமன்றத்தில் துறைவாரியான வரவேற்பு பிரிவு வேண்டும். அதில் பணியமர்த்தப்படுவோர் மூலமே நீதிமன்ற பணிகளை செய்யவும், வழக்கு தொடர்பாக செலவிடும் பணத்திற்கு அரசு வழக்கறிஞர்கள் ரசீது வழங்கவும், அந்த ரசீதுக்கான பணத்தை கருவூலம் மூலம் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.