/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்கள் பதிவு
/
விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண்கள் பதிவு
ADDED : நவ 05, 2025 12:38 AM
திருப்பரங்குன்றம்: ''திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் பதிவு நடந்து வருகிறது'' என வேளாண்மை உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகளுக்கு தனிப் பதிவு எண் பதிவு செய்யும் பணி 6 மாதங்களாக நடக்கிறது. இப்பகுதியிலுள்ள 8 ஆயிரம் விவசாயிகளில் தற்போதுவரை 2200 பேர் மட்டுமே இந்த எண்ணுக்காக பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் பதிவு செய்யாமல் உள்ளனர்.
அவர்களுக்கு தனித்தனியாக தகவல் தெரிவித்து பதிவு செய்யும் பணி நடக்கிறது. இந்த தனித்துவ அடையாள எண் பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே மானிய விலையில் வேளாண் இயந்திரம், இடுபொருட்கள், வங்கிக் கடன் பெற முடியும். குறிப்பாக பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தில் தொடர்ந்து நிதி உதவியும் பெற முடியும்.
இந்த அடையாள எண் பதிவு செய்யாத விவசாயிகள் அடுத்த தவணை நிதி உதவி பெற இயலாது. எனவே தனித்துவ அடையாள எண் பதிவு செய்யாத விவசாயிகள் அந்தந்த பகுதி கள அலுவலர்களையோ, சிட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட அலைபேசியுடன் திருநகர் 2 வது பஸ் நிறுத்தத்தில் உள்ள வேளாண் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என்றார்.

