/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின்சாரம் தாக்கி ஊழியர் பலி உறவினர்கள் சாலை மறியல்
/
மின்சாரம் தாக்கி ஊழியர் பலி உறவினர்கள் சாலை மறியல்
மின்சாரம் தாக்கி ஊழியர் பலி உறவினர்கள் சாலை மறியல்
மின்சாரம் தாக்கி ஊழியர் பலி உறவினர்கள் சாலை மறியல்
ADDED : டிச 26, 2024 05:12 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் இறந்ததால், உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.
உசிலம்பட்டி அருகே காளப்பன்பட்டியைச் சேர்ந்தவர் சுபாகரன் 33. உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்தார். நேற்று காலை 10:30 மணிக்கு உசிலம்பட்டி கீழப்புதுார் பெரிய பூசாரி தெருவில் செந்தில் என்பவர் வீட்டின் மின் இணைப்பை சரிசெய்ய மின்பாதை ஆய்வாளர் துரைச்சாமியுடன் 58, சென்றார்.
மின்கம்பத்தில் ஏறி பாதுகாப்புக்கான இடுப்புக் கயிறு கட்டி, மின் இணைப்பை சரி செய்தார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மின்கம்பத்திலே உயிரிழந்தார்.
உறவினர்கள் மறியல்
உசிலம்பட்டி போலீசார் சுபாகரனின் உடலை, பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அதற்கான பணிகள் நடந்த போது உறவினர்கள், ''மின்துறையினர் யாரும் வரவில்லை, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்''எனக் கோரி, மதியம் 2:30 மணிக்கு, மருத்துவமனை முன் பேரையூர் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்தது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றன.
போலீஸ் டி.எஸ்.பி., செந்தில்குமார், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் உள்பட அதிகாரிகள், துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், போலீஸ் நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்கிறோம் எனக் கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்தனர்.
மறியலால் உசிலம்பட்டி-பேரையூர் ரோட்டில் ஒன்றேகால் மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.