/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுங்க...
/
நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுங்க...
ADDED : டிச 11, 2024 06:34 AM
உசிலம்பட்டியில் துணைத் தாசில்தார்கள் தாணுமூர்த்தி, ராஜ்குமார், மகேந்திரபாபு முன்னிலையில் நடந்த கூட்டத்தில், ''58 கிராம கால்வாய் தொட்டிப்பாலம் பகுதியில் வெடி வைப்பதால் ஏற்படும் அதிர்வுகளால் மட்டும் பாதிப்பு கிடையாது. அந்தப்பகுதியில் அதிகமாக தோண்டுவதால் மண் சரிவு ஏற்பட்டு தொட்டிப்பால துாண்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
உசிலம்பட்டி ஒன்றியத்தில் 128 நீர்நிலைகள் உள்ளதாக தெரிவித்தனர். இவற்றில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா, நீர்வரத்து ஓடைகள் சரியாக உள்ளதா என கண்காணித்து அகற்ற வேண்டும். நல்லுத்தேவன்பட்டி கண்மாய் நீர் வரத்து ஓடையை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்றனர்.
பேரையூரில் தாசில்தார் செல்லப்பாண்டி தலைமையில் நடந்த கூட்டத்தில், மக்காச் சோளப் பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. மகசூல் கிடைக்க வாய்ப்பில்லை. அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும். எம்.கல்லுப்பட்டி அய்யனார் அணையை துார்வாரி சீரமைக்க வேண்டும். மாதம் ஒருமுறை நடக்கும் இந்த கூட்டத்திற்கு பல அதிகாரிகள் வருவதில்லை, என்றனர்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
மேலுாரில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது: கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிட்டாபட்டி, வல்லாளபட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்வதோடு, பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு மையமாக அறிவிக்க வேண்டும்.
சிறு குறு விவசாயிகளுக்கு நுாறு சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க, பணம் கேட்கும் நிறுவனத்தை வேளாண் அதிகாரிகள் மாற்ற வேண்டும். ஒருபோக பாசனத்திற்கு உரிய அளவு தண்ணீர் திறக்காததால் கடைமடை வரை தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. தும்பைப்பட்டி பகுதியில் விவசாய உபகரணங்கள் வழங்கவில்லை என்றனர்.
வாடிப்பட்டியில் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் வேளாண் உதவி இயக்குனர் பாண்டி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ஷாலினி பங்கேற்றனர். மத்திய அரசின் திட்டத்தில் குடிநீர் குழாய்க்காக தோண்டிய குழிகள் அரைகுறையாக மூடப்படுகிறது. இப்பள்ளங்களில் மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியவில்லை.
நடப்பு ஆண்டில் தவறிய பருவ மழையால் களைகள் நிறைந்து மகசூல் குறைந்துள்ளது. அரசு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் தரவேண்டும். பாசனத்திற்கு விவசாயிகளிடம் கருத்து கேட்டு தண்ணீர் திறக்கணும் என்றார்.
நாளை கூட்டம்
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (டிச.12) காலை 11:00 மணிக்கு நடக்கிறது என தாசில்தார் கவிதா தெரிவித்துள்ளார்.

