/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சியில் சமுதாயக் கூடங்களின் வாடகை 'கரை வேட்டிகள்' கபளீகரம்: வருவாய் இழப்புக்கு 'கடிவாளம்' போடுவாரா கமிஷனர்
/
மாநகராட்சியில் சமுதாயக் கூடங்களின் வாடகை 'கரை வேட்டிகள்' கபளீகரம்: வருவாய் இழப்புக்கு 'கடிவாளம்' போடுவாரா கமிஷனர்
மாநகராட்சியில் சமுதாயக் கூடங்களின் வாடகை 'கரை வேட்டிகள்' கபளீகரம்: வருவாய் இழப்புக்கு 'கடிவாளம்' போடுவாரா கமிஷனர்
மாநகராட்சியில் சமுதாயக் கூடங்களின் வாடகை 'கரை வேட்டிகள்' கபளீகரம்: வருவாய் இழப்புக்கு 'கடிவாளம்' போடுவாரா கமிஷனர்
ADDED : ஏப் 21, 2025 06:25 AM

மதுரை: மதுரை நகரில் சமுதாயக் கூடங்களின் வருவாயை ஆளுங்கட்சியினர் சத்தமின்றி 'கபளீகரம்' செய்து வருவதால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மாநகராட்சியில் உள்ள 100ல் 60க்கும் மேற்பட்ட வார்டுகளில் எம்.எல்.ஏ., எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி சார்பில் மக்கள் பயன்பாட்டிற்காக சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு பொது மக்கள் தங்கள் வீடுகளில் நடக்கும் சிறிய விசேஷ நிகழ்வுகளை குறைந்த வாடகையில் நடத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.2500 வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வார்டு உதவிப் பொறியாளர்கள் சார்பில் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இவற்றின் சாவிகள் அந்தந்த கவுன்சிலர், ஆளுங்கட்சி பிரமுகர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது.
அவர்கள், தனியார் கல்யாண மண்டபத்திற்கு இணையாக மாநகராட்சி சமுதாயக் கூடங்களுக்கான வாடகையை நிர்ணயித்து, தன்னிச்சையாக வசூலிக்கவும் செய்கின்றனர். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட வாடகையைக் கூட மாநகராட்சிக்கு சரிவர செலுத்துவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால் மாநகராட்சிக்கு தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: பழைய 72 வார்டுகள் தவிர புதிதாக இணைக்கப்பட்ட வார்டு களில் அதிக எண்ணிக்கையில் சமுதாயக் கூடங்கள் உள்ளன. மாநகராட்சி வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் கமிஷனராக கார்த்திகேயன் இருந்த காலத்தில் ரூ.2500 என வாடகை நிர்ணயிக்கப்பட்டது.
இந்த வாடகை மூலம் பராமரிப்பு, மின்சார செலவு ஈடுசெய்யப்பட்டது. உதவிப் பொறியாளர்கள் கட்டுப்பாட்டில் இந்த சமுதாயக் கூடங்கள் இருந்தன. இதைப் பயன்படுத்த விரும்புவோர் ரூ.2500 ஐ மாநகராட்சிக்கு செலுத்திய ரசீது கொண்டுவந்தால் தான் சாவி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது சமுதாயக் கூடங்கள் கவுன்சிலர்கள், கட்சியினர் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. அவர்களிடம் தான் சாவியும் உள்ளது.
ஒரு நிகழ்ச்சிக்கு ரூ.10 ஆயிரம் வரை கூட வாடகையாக வசூலிக்கின்றனர். அவ்வளவு வசூலித்தாலும் மாநகராட்சிக்குரிய வாடகையைக்கூட அவர்கள் செலுத்துவதில்லை.
பல வார்டுகளில் உதவிப் பொறியாளர்கள் இல்லை. அங்கு கூடுதல் பொறுப்பில் உள்ள தொழில்நுட்ப உதவியாளர்களால் 'கரை வேட்டிகளை' கட்டுப்படுத்த முடியவில்லை. சீனியர் உதவிப் பொறியாளர்கள் உள்ள வார்டுகளில் இப்பிரச்னை இல்லை.
ஏற்கனவே மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், மீன் மார்க்கெட், இருசக்கர வாகன காப்பகங்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட ஏலம் விடப்படாத இனங்கள் ஆளுங்கட்சி பிரமுகர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கெல்லாம் கூடுதல் கட்டணம் வசூலித்து அவர்கள் செழிப்பாக உள்ளனர். மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் விவகாரங்களுக்கு கமிஷனர் சித்ரா 'கடிவாளம்' போட வேண்டும் என்றனர்.

