/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நிலையூர் கால்வாய் கழிவுகள் அகற்ற கோரிக்கை
/
நிலையூர் கால்வாய் கழிவுகள் அகற்ற கோரிக்கை
ADDED : ஆக 22, 2025 03:04 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் திறப்பதற்குள் நிலையூர் கால்வாய்களுக்குள் கிடக்கும் கழிவுகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் நிலையூர் கால்வாய்கள் வழியாக திருப்பரங்குன்றம் தென்கால், பனங்குளம், ஆரியங்குளம், செவ்வந்திக்குளம், மேலநெடுங்குளம், நிலையூர் பெரிய கண்மாய் உள்பட பல்வேறு கண்மாய்கள் நிரம்பும்.
இதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நிலையூர் கால்வாய்களில் செடி கொடிகள் வளர்ந்து கிடக்கின்றன. விளாச்சேரி முதல் சந்திராபாளையம் வரை கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் அனைத்து கழிவுநீரும் கால்வாய்க்குள் விடப்படுகிறது. அனைத்து குப்பையும் கொட்டப்படுகிறது. இவை அனைத்தும் தண்ணீர் திறக்கப்படும் போது அடித்துச் செல்லப்பட்டு கண்மாய்களுக்குள் செல்கிறது.
மற்ற மாதங்களில் நிலையூர் கால்வாய்களில் கழிவு நீர், குப்பை தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நீர்வளத்துறையினர் நிலையூர் கால்வாயில் உள்ள அனைத்து குப்பையையும் அகற்றி கால்வாய் கரையில் வைக்கின்றனர். செடி, கொடிகளை விவசாயிகள் அகற்றி கரையில் வைக்கின்றனர்.
சில மாதங்களுக்கு பின்பு அந்த குப்பையும், புதிய குப்பையும் கால்வாய்க்குள் விழுகிறது. வைகை அணை திறப்பதற்குள் நிலையூர் கால்வாய்களுக்குள் உள்ள பிளாஸ்டிக் உள்பட அனைத்து கழிவுகளையும் அகற்றவும், அகற்றப்பட்ட கழிவுகளை வாகனங்கள் மூலம் வேறு இடத்திற்கு கொண்டு செல்லவும் நீர்வளத் துறை மாநகராட்சி இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

