/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையின் தனித்தீவா லேக் ஏரியா மாநகராட்சிக்கு குடியிருப்போர் கேள்வி
/
மதுரையின் தனித்தீவா லேக் ஏரியா மாநகராட்சிக்கு குடியிருப்போர் கேள்வி
மதுரையின் தனித்தீவா லேக் ஏரியா மாநகராட்சிக்கு குடியிருப்போர் கேள்வி
மதுரையின் தனித்தீவா லேக் ஏரியா மாநகராட்சிக்கு குடியிருப்போர் கேள்வி
ADDED : நவ 03, 2025 04:31 AM

மதுரை: மாநகராட்சி 9 வது வார்டில் லேக் ஏரியா, டி.டி.சி., நகர் பகுதிகள் உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆமை வேக பாதாள சாக்கடை பணிகள், மண் ரோடு மத்தியில் தனித்தீவு உணர்வோடு வாழ்ந்து வருவதாகக் கூறும் அவர்கள், தங்கள் பகுதி அடிப்படை வசதியில் பின்தங்கியிருப்பதாக புலம்புகின்றனர்.
மாற்றுப்பாதை இல்லை இப்பகுதி மேம்பாட்டுக்காக செயல்படும் குடியிருப்போர் சங்க தலைவர் பாலசந்திரன், செயலாளர் ஜின்னா, பொருளாளர் பாண்டியராஜன், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், சுப்பையா, பிரபு, செல்லப்பன், ஜாபர் அலி, சின்னமுத்து கூறியதாவது: லேக் ஏரியாவுக்கு போக்குவரத்து மிகுந்த மேலுார் ரோட்டில் இருந்து நேரடியாக வருவதற்கு வழி இல்லை.
மாட்டுத்தாவணியில் இருந்து வருவோர் மேலுார் ரோடு - ரிங் ரோடு சந்திப்பு பகுதி வரை நெடுந்துாரம் சென்றே மீண்டும் வர முடியும். மேலுார் ரோட்டில் உள்ள பேரிகார்டுகளை அகற்றி வழி ஏற்படுத்தி தரவேண்டும்.
இதற்காக பாண்டி கோயில் டைடல் பார்க் எதிரே துவங்கி மேற்கே சென்ட்ரல் மார்க்கெட் வரை வண்டியூர் கண்மாய் ஓரமாக பாலம் அமைத்து, மேலுார் ரோடு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணலாம்.
20 ஆண்டுகளுக்கு மேலாக ரோடு அமைக்காமல் காலம் தாழ்த்துகின்றனர். லேக் ஏரியா 6 வது தெரு, டி.டி.சி., நகர் முதல் மூன்று தெருக்கள் மண் ரோடாக உள்ளன.
மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதி முழுவதும் நீர்சூழ்ந்து தனித் தீவில் தத்தளிக்கும் சூழல் உருவாகிறது. கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தினாலும் 2 மாதங்களாக குடிநீர் வரவில்லை. டி.டி.சி., நகர் 2 வது தெரு முதல் 10 வது தெரு வரை அடிக்கடி குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.
தடுப்புச்சுவர் அவசியம் சாத்தையாறு ஓடையை ரூ.2 லட்சம் செலவில் சங்கத்தின் சார்பில் துார்வாரியுள்ளோம். ஓடைக்கரையில் வெள்ளத்தை தடுக்கும் வகையில் கான்கிரீட் தடுப்புச்சுவர் ஏற்படுத்தித்தர வேண்டும்.
டி.டி.சி., நகர் பிரதான ரோடு, 6 வது, 8 வது தெருக்களில் பூங்காக்கள் வெறும் பெயரளவில்தான் உள்ளன. எவ்வித உபகரணங்களும் இல்லாமல் பயன்பாடின்றி கிடக்கிறது. மாநகராட்சி பூங்கா செல்ல 3 கி.மீ., துாரம் செல்ல வேண்டியுள்ளது. சமுதாயக் கூடம் ஏற்படுத்தித்தர வேண்டும்.
பெரும்பாலான இடங்கள் முட்புதர்களாக இருப்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தெருவிளக்குகள் போதிய வெளிச்சம் தராமல் அடிக்கடி பழுதாகின்றன.
உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும். இப்பகுதியில் திரியும் நுாற்றுக் கணக்கான தெருநாய்கள் கோழிகளை கொன்று குவிக்கின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள், பெரியவர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன.
சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடப்பதால், கண்காணிப்பு கேமரா அமைப்பதுடன், போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.

