/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆடிப்பெருக்கில் தாய்மாமனுக்கு மரியாதை
/
ஆடிப்பெருக்கில் தாய்மாமனுக்கு மரியாதை
ADDED : ஆக 04, 2025 04:50 AM

உசிலம்பட்டி: ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தில் உசிலம்பட்டி பகுதியில் உள்ள குல தெய்வக் கோயில்களுக்கு பக்தர்கள் வழிபாட்டுக்காக குவிந்தனர்.
கருமாத்துார் மூணு சாமி கோயில்கள், பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில், வாலாந்துார் அங்காளஈஸ்வரி, நாட்டார்மங்கலம் ஆதிசிவன் என குலதெய்வ கோயில்களில் வழிபாடு நடத்தினர்.
கருமாத்துார் கோட்டை மந்தை கொத்தாள பெரியகருப்பு சாமி கோயிலில் ஆடிப்பெருக்கு தினத்தில் தாய்மாமனுக்கு மரியாதை செலுத்தி ஆடிப்பட்டத்தில் விதைப்பதற்கான தானியங்கள் வழங்கிக் கொண்டாடினர். தனது சகோதரியின் பிறப்பு முதல், திருமணமாகி செல்வதுடன் மட்டுமின்றி, அவர்களின் வாழ் நாள் முழுவதும் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் உறவு முறையான தாய்மாமன்கள், சகோதரி குடும்பத்திற்கு ஆடிச் சீதனமாக விதைமணிகள் வழங்குவர்.
இந்த பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு மரியாதை செலுத்தி ஆசிபெறும் நிகழ்ச்சி நடந்தது. தாய்மாமன்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்து, ஆடிப்பட்டத்தில் விதைக்க விதைகளும் கொடுத்து ஆசி பெற்றனர். ஏற்பாடுகளை கள்ளர் நாடு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

