/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி வருவாய் பிரிவு சிறப்பு முகாம்கள் நடத்தினால் வருவாய் அள்ளலாம்...
/
மாநகராட்சி வருவாய் பிரிவு சிறப்பு முகாம்கள் நடத்தினால் வருவாய் அள்ளலாம்...
மாநகராட்சி வருவாய் பிரிவு சிறப்பு முகாம்கள் நடத்தினால் வருவாய் அள்ளலாம்...
மாநகராட்சி வருவாய் பிரிவு சிறப்பு முகாம்கள் நடத்தினால் வருவாய் அள்ளலாம்...
ADDED : மே 16, 2025 03:27 AM

மதுரை: மதுரை மாநகராட்சியில் வருவாய் பிரிவு சார்பில் நடத்திய சிறப்பு முகாம்களை மீண்டும் நடத்தினால் விரிவாக்க வார்டுகளில் நுாற்றுக்கணக்கான வீடுகள், கடைகளில் வரிவருவாய்களை வசூலிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மாநகராட்சியில் 100 வார்டுகளாக அதிகரித்த பின் விரிவாக்க வார்டுகளில் பெரும்பாலான வீடுகள், கடைகளுக்கு வரி விதிக்கப்படவில்லை. இவ்வகையில் 25க்கும் மேற்பட்ட விரிவாக்க வார்டுகளில் மட்டும் புதிதாக கட்டப்பட்ட நுாற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் உள்ளன. இப்பகுதியில் வரிவிதிக்க கோருவது தொடர்பாக மக்கள் அளித்த மனுக்கள் ஏதோ காரணத்திற்காக கிடப்பில் போடப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தற்போது மாநகராட்சிக்கு வருவாய் தரக்கூடிய பல்வேறு விஷயங்களில் கமிஷனர் சித்ரா ஆர்வம் காட்டுகிறார். குறிப்பாக மாட்டுத்தாவணி இருசக்கர வாகன காப்பகம் உள்ளிட்ட மாநகராட்சி வசூலிக்கும் பல்வேறு இனங்களில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் கூட்டு சேர்ந்து முறைகேடு செய்து, ரூ. பல லட்சம் வருவாய் இழப்பை சரிசெய்தார். அங்கு கியூ.ஆர்., கோடு மூலம் வசூலிக்கும் முறையை கொண்டுவந்தார். இதுபோல் விரிவாக்க வார்டுகளில் பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாத வரிகளை சிறப்பு முகாம்கள் நடத்தி வசூலித்தால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இதுகுறித்து மாநகராட்சி சீனியர் அதிகாரிகள் கூறியதாவது: விரிவாக்க பகுதியின் ஒவ்வொரு வார்டிலும் 100க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் வரிவிதிக்கப்படாமல் உள்ளன. கூடுதல் கட்டடப் பகுதிக்கும் வரி விதிப்பு இல்லை. இதுபோல் வணிக கடைகளும் உள்ளன. உரிமையாளர்கள் விண்ணப்பித்தாலும் 'பல ஆயிரங்களில் வரி செலுத்த நேரிடும்' என மாநகராட்சி அலுவலர்கள் சிலர் தவறான ஆலோசனைகளைக் கூறி அவர்களிடம் தாங்கள் 'பலனடைகின்றனர்'.
கார்த்திகேயன், சிம்ரன்ஜீத் சிங் காலோன் கமிஷனர்களாக இருந்தபோது விரிவாக்க வார்டுகளில் புதன்கிழமை தோறும் சிறப்பு முகாம்களை நடத்தினர். பலர் வரி செலுத்தினர். அவர்களுக்கு அன்றே நடவடிக்கை எடுத்து வரிவிதிப்பில் இருந்த சிக்கல்களுக்கு தீர்வும் அளிக்கப்பட்டது. அடுத்து வந்த கமிஷனர்கள் ஆர்வம் காட்டவில்லை.
மீண்டும் சிறப்பு முகாம் நடத்தினால் வரிவருவாய் அதிகரிக்கும். வணிக கட்டடங்களுக்கு குடியிருப்பு வரி வசூலிப்பதை மாற்றியமைத்தும் வருவாயை அதிகரிக்கலாம் என்றனர்.