/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பட்டா பிரச்னையில் போலீஸ் நடவடிக்கை தவிர்க்க வலியுறுத்தல்; வருவாய் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு
/
பட்டா பிரச்னையில் போலீஸ் நடவடிக்கை தவிர்க்க வலியுறுத்தல்; வருவாய் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு
பட்டா பிரச்னையில் போலீஸ் நடவடிக்கை தவிர்க்க வலியுறுத்தல்; வருவாய் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு
பட்டா பிரச்னையில் போலீஸ் நடவடிக்கை தவிர்க்க வலியுறுத்தல்; வருவாய் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு
ADDED : நவ 25, 2024 04:46 AM
மதுரை : ''பட்டா மாறுதல் வழங்கும் பிரச்னையில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்போது, போலீஸ் மூலம் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்'' என, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், ஜெயகணேஷ், முத்துமுனியாண்டி, ராஜாமணி, சுரேஷ், மாரியப்பன், நந்தகுமார், சண்முகராஜா ஆகியோர் மதுரை கலெக்டர் சங்கீதாவை சந்தித்து அளித்த மனு:
வருவாய், நில அளவைத் துறைகளில் அதிகப்படியான காலியிடங்கள் உள்ளதாலும், மனுக்களை தள்ளுபடி செய்யக் கூடாது என்ற வாய்மொழி உத்தரவாலும், காலஅவகாசம் இன்றி, அவசரத்தில் கவனக்குறைவாக பட்டாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் சூழ்நிலை உள்ளது.
தவறான பட்டாக்களுக்கு மேல்முறையீட்டு அலுவலரால் (ஆர்.டி.ஓ.,) ரத்து செய்யவும், தவறான உள்நோக்கத்துடன் பட்டா மாறுதல் செய்தது தெரிந்தால், தவறு செய்த அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் விதிமுறைகள் உள்ளன. இச்சூழலில் தமிழகம் முழுவதும் போலீஸ் நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு மூலம் எப்.ஐ.ஆர்., பதிவு செய்து கைது நடவடிக்கை எடுப்பதை தடுக்க வேண்டும்.
கடந்த மார்ச்சில் வழங்க வேண்டிய முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு பட்டியலை உடனே வெளியிட வேண்டும். முழுப்புலம் பட்டா மாறுதல் இனங்களை மீண்டும் மண்டல துணை தாசில்தார்களிடமே வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் பணியிட மாறுதலை பொதுக் கலந்தாய்வு மூலம் மட்டுமே வழங்க வேண்டும்.
அரசின் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்கள் தாசில்தார், ஆர்.டி.ஓ., கலெக்டர் அலுவலகங்களில் பணிபுரிவதை கைவிட்டு, அவர்களுக்கான கிராமங்களில் பணிசெய்வதை உறுதிப்படுத்த வேண்டும். சங்க நிர்வாகிகளை மாதம் ஒருமுறை மாவட்ட நிர்வாகம் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.