/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கம்பர்மலை பட்டியில் கருகும் நெற்பயிர்கள்
/
கம்பர்மலை பட்டியில் கருகும் நெற்பயிர்கள்
ADDED : நவ 15, 2025 04:56 AM

மேலுார்: கம்பர்மலை பட்டியில் நேரடி பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது .
கள்ளந்திரி - குறிச்சிப்பட்டி வரை பெரியாறு ஒருபோக பாசனத்திற்கு 12-வது பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. இதில் கீழையூர் 8 வது கால்வாய் வழியாக செல்லும் தண்ணீரில் ஏராளமான கண்மாய்கள் மூலமும், நேரடி பாசனத்தில் ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது.
இப்பகுதிக்கு 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததால் பயிர்கள் கருக ஆரம்பித்துள்ளது.
விவசாயி சேது கூறியதாவது: வங்கிக் கடன் பெற்று ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் செலவு செய்தோம். ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில் தண்ணீர் இன்றி வயலில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பயிர்களின் வளர்ச்சி குறைந்து கருக ஆரம்பித்துள்ளது.
நீர்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டால், 'புலிப்பட்டியில் குறைந்த அளவு தண்ணீர் வருவதால் பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் தர முடியவில்லை' என்கின்றனர். பயிர்கள் கருகுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பதோடு, கடன் செலுத்த வழியின்றி திகைக்கிறோம். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்றார்.
நீர்வளத் துறையினர் கூறுகையில், பாசனத்திற்கு போதுமான அளவில் தண்ணீர் கொடுத்து வருகிறோம் என்றனர்.

