/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சுழிக்காற்றால் சாய்ந்த நெற்பயிர்கள்
/
சுழிக்காற்றால் சாய்ந்த நெற்பயிர்கள்
ADDED : டிச 29, 2024 04:44 AM

உசிலம்பட்டி: செல்லம்பட்டி ஒன்றியத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன பகுதிகளில் பயிரிடப்பட்டு விளைந்த நெற்பயிர்கள் சுழிக்காற்றால் சாய்ந்துள்ளன. கதிர்பிடிக்காத வயல்களில் இல்லாத பாதிப்பு அறுவடைக்கு தயாரான நெல்வயல்களை மட்டும் தாக்கியுள்ளதால் விளைச்சலில் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
செல்லம்பட்டி ஒன்றியத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய் நீர் மூலம் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் நடக்கிறது. குப்பணம்பட்டி, வாலாந்துார், சொக்கத்தேவன்பட்டி, ஆரியபட்டி, திடியன், செல்லம்பட்டி, கட்டக்கருப்பன்பட்டி, ஆனையூர், நாட்டாபட்டி, சடச்சிபட்டி, வின்னகுடி, சின்னகுறவகுடி, அய்யனார்குளம், போடுவார்பட்டி, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதான பயிராக நெல் உள்ளது.
இந்த ஆண்டு வழக்கம்போல் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் புரட்டாசி மாதத்திலேயே நெல் நடவு பணிகள் துவங்கின. விதைநெல், உழவு, உரம், நாற்று, நடவு, களை பறித்தல் என ஏக்கருக்கு சராசரியாக ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. டிச.27 மாலை சாரல் மழையுடன் சுழிக்காற்றும் வீசியதால், தை மாதம் அறுவடைக்கு தயாராகுமளவு வளர்ந்துள்ள நெல் ஆங்காங்கே மொத்தமாக வயல்வெளிகளில் சாய்ந்துள்ளன.
தேவராஜன், கட்டக்கருப்பன்பட்டி: 3 ஆண்டுகளாக இதே பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த ஆண்டு கோடையிலும் திடீர் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
மழை மட்டும் பெய்தால் பயிர்கள் ஓரளவு தாக்குபிடித்து நிற்கும்.
ஆனால், நேற்று முன்தினம் பலத்த காற்றும் வீசியதால் நெல்பயிர்கள் பாய் விரித்தது போல் சாய்ந்துள்ளன.
இதனால் கதிர்கள் முழுவளர்ச்சி பெறாமல் போகும். தண்ணீரில் மூழ்கியுள்ள கதிர்கள் முற்றியதாக இருந்தால் முளைத்து விடவும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு முறை பாதிப்பு ஏற்பட்ட போதும் கணக்கீடு செய்து செல்கின்றனர்.
இழப்பீடு மட்டும் கிடைப்பதில்லை. என்னுடைய 6 ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.