
உசிலம்பட்டி, : செல்லம்பட்டி ஒன்றியத்தில் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேலாக நெல் பயிரிட்டு, ஒவ்வொரு பகுதியாக அறுவடை நடந்து வருகிறது. பாதி விளைச்சல் வந்த போது மழையால் பயிர்கள் சாய்ந்து கதிர்கள் முழுமையாக விளைச்சல் பெறாமல் போனது.
சேதமடைந்த பயிர்களை வேளாண், வருவாய் அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். தற்போது அறுவடை நடந்து வரும் நிலையில், பெரும்பாலான நெல் மணிகள் முழுமையாக வளர்ச்சி பெறாமல் போனதால் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாமல் போனது.
திடியன் கிராமம் கண்ணுச்சாமி கூறியதாவது: 4 ஏக்கரில் சன்னரக நெல் அறுவடை நடந்து வருகிறது. உழவு, விதைநெல், நாற்றாங்கால், நடவு, உரம், களையெடுப்பு, அறுவடை என ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவானது. மழையால் கதிர் பிடிக்கும் பருவத்தில் நெல் பயிர்கள் சாய்ந்து போனது. பதர் அதிகரித்து ஏக்கருக்கு 35 மூடைகள் கிடைக்க வேண்டிய நிலையில் 20 மூடை கிடைத்துள்ளது. இதனால் வெகுவாக பாதித்துள்ளோம் என்றார்.