திருமங்கலம் ; திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் விடத்தகுளம் ஊராட்சி எட்டுநாழி புதுாரில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். கிராமத்துக்கான மயான பாதையை சில ஆண்டுகளுக்கு முன்பு நத்தம் புறம்போக்கு என வகைப்படுத்தி 4 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. இதில் மூன்று பேர் மயான பாதைக்கு அனுமதித்த நிலையில் ஒருவர் மட்டும் அனுமதி மறுத்துள்ளார்.
இந்நிலையில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் இப்பகுதியில் மயானத்திற்கான ரோடு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இது குறித்து அறிந்த அந்த நபர் தனது பட்டா நிலம் வழியாக பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ரோடு அமைக்கும் பணி கிடப்பில் உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை கிராம மக்கள் விடத்துக்குளம் - கூடக்கோவில் ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். திருமங்கலம் தாலுகா போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

