/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றத்தில் அலங்கோலமான ரோடுகள்
/
திருப்பரங்குன்றத்தில் அலங்கோலமான ரோடுகள்
ADDED : ஏப் 09, 2025 05:10 AM

மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 5 ல் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் செங்குன்றம் பகுதிகளில் ரோடுகள் அலங்கோலமாக உள்ளதுடன், நாய்கள் தொல்லையும் அதிகமுள்ளது.
இப்பகுதியில் உள்ள செங்குன்றம் 1, 6 வது தெருக்கள், கோல்டன் சிட்டி, வி.ஐ.பி., சிட்டி, ஓம்முருகா நகர் பகுதிகளில் ரோடுகள் மிகவும் மோசமாக உள்ளன.
நான்கைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதிக்குள் ரோடு கற்கள் நிறைந்ததாகவே உள்ளது. பராமரிப்பு இல்லாததால் பள்ளம், மேடாக, மழை நேரத்தில் தண்ணீர் தேங்கி பாதசாரிகளையும், வாகன ஓட்டிகளையும் பதம் பார்ப்பதாக உள்ளன.
விரிவாக்க பகுதியான இங்குள்ள வீடுகளைச் சுற்றி அடர்ந்த புதர்கள் மண்டிக் கிடப்பதால் பாம்புகள் தொல்லையும், நாய்கள் தொல்லையும் அதிகம் உள்ளது. போதாக்குறைக்கு அவ்வப்போது தெருவிளக்குகள் எரியாமல் போகிறது. இதனால் அந்தி நேரத்திலேயே அச்சம் ஏற்பட்டு ஆட்கள் நடமாட்டம் குறைந்து விடுகிறது.
இப்பகுதி செங்குன்றம் பகுதி குடியிருப்போர் சங்க தலைவர் ஜெயபால், செயலாளர் மோகன் கூறுகையில், ''மழையால் ரோடுகள் அரித்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாகி விடுகிறது. எனவே அடிப்படை வசதியை உடனே செய்து தரவேண்டும்'' என்றனர்.

