/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குழந்தைகளை பாதிக்கும் ‛'ஆர்.எஸ்.வி.' காய்ச்சல்
/
குழந்தைகளை பாதிக்கும் ‛'ஆர்.எஸ்.வி.' காய்ச்சல்
ADDED : செப் 26, 2024 05:13 AM
மதுரை: ''குழந்தைகளை பாதிக்கும் 'ரெஸ்பரேட்டரி சினிட்டிக்கல் வைரஸ்' எனப்படும் ஆர்.எஸ்.வி., காய்ச்சலைக் கண்டு பெற்றோர் பயப்பட வேண்டியதில்லை'' என மதுரை மாவட்ட சுகாதார துணை இயக்குநர் குமரகுரு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மதுரையில் ஆகஸ்டில் மழை பெய்த நிலையில் ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கம் போல வரும் ப்ளூ, வைரஸ் காய்ச்சல்கள் பாதிப்பை ஏற்படுத்தினாலும் தாக்கம் அதிகரிக்கவில்லை. சிறுநீரகத் தொற்று, புற்றுநோய் உட்பட பெரும்பாலான நோய்களுக்கு காய்ச்சல் வரலாம். மலேரியா, டெங்கு உட்பட எந்த வகை காய்ச்சலாக இருந்தாலும் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆர்.எஸ்.வி., வைரஸ் என்பது சாதாரண சளி காய்ச்சல் வகையைச் சேர்ந்தது தான். மதுரை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று முன்தினம் 5 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகள் மற்றும் 20 பேர் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று (செப்.25) 6 குழந்தைகள் உட்பட 25 பேர் காய்ச்சலுக்கு அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 73 பேர் சிகிச்சையில் உள்ளனர். மதுரையில் திருமங்கலம், மேலுார் அரசு மருத்துவமனைகளில் 2 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
வெயிலில் சென்று வந்தபின் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது, துாசியில் வேலை செய்வது, பாட்டிலில் வைத்த பழைய தண்ணீரை குடிப்பது போன்றவற்றால் சளி, காய்ச்சல் ஏற்படலாம். குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் கை வைத்தியம் செய்யாமல் டாக்டரிடம் உடனடியாக காண்பிப்பதே நல்லது என்றார்.