/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மறியல் போராட்ட முடிவு
/
ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மறியல் போராட்ட முடிவு
ADDED : டிச 09, 2024 05:25 AM
மதுரை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளர்கள், எஸ்.பி.எம்., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் பணிவரன் முறைப்படுத்தப்பட வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தனி ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும், வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பிறதுறை பணிகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக கடந்த ஜூலையில் 2 நாட்கள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தினர். அதன்பின் நான்கு மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் டிச.2 ல் கறுப்புப் பட்டை அணிந்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஏற்பாடு செய்தனர். புயல், மழை வெள்ளப் பாதிப்புகளால் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து மறியல் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர். மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கூறுகையில், ''கோரிக்கைகள் நிறைவேற தாமதமாவது குறித்து நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் டிச.19 ல் மதுரை அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகே மறியல் போராட்டம் நடத்துவது. இதுகுறித்து டிச.11 முதல் 17 வரை அனைத்து வட்டார கிளைகளில் பிரசாரம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.