ADDED : ஜூலை 10, 2026 04:42 AM

மதுரை: மதுரை நகரில் துாய்மைப் பணி மேற்கொள்ளும் அவர்லேண்ட் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் துாய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள் சங்கம், வி.சி., தொழிலாளர் விடுதலை முன்னணி, சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய இப்போராட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
பணியாளர்களுக்கு அவர்லேண்ட் நிறுவனம் 'ஆப்சென்ட்' என போட்டு சம்பளம் பிடிப்பதை நிறுத்த வேண்டும், ஒப்பந்த நிறுவன உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
சங்க நிர்வாகிகளிடம் மாநகராட்சி துணை கமிஷனர்கள் ராஜாராம், ஜெய்னுலாபுதீன், உதவிநகர்நல அலுவலர் அபிஷேக், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து 4 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மா.கம்யூ., எம்.பி., வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் கணேசன், விஜயராஜன், சி.ஐ.டி.யு., பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
