/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாப்டூர், சோழவந்தானில் எழுந்தருளிய அழகர்
/
சாப்டூர், சோழவந்தானில் எழுந்தருளிய அழகர்
ADDED : மே 13, 2025 04:29 AM

பேரையூர், : பேரையூர் தாலுகா பழையூர் திருவேங்கட பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவில் நேற்று சாப்டூர் ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு நடந்தது. பக்தர்கள் தந்த நெல்மணி மாலை, பணமாலை, துளசி மாலை, பூ மாலை உள்ளிட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பழையூரில் இருந்து சாப்டூருக்கு அழகருக்கு பச்சை பட்டு அணிவிக்கப்பட்டு பக்தர்கள் சுமந்து சென்றனர். அப்போது குடிப்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து அம்மன் புறப்பட்டு வடகரப்பட்டியில் கள்ளழகர், மீனாட்சி அம்மன் எதிர்சேவை நிகழ்வு நடந்தது. சாப்டூர் போலீஸ் ஸ்டேஷன் மண்டகப்படியில் சுவாமி எழுந்தருளினார்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கள்ளழகராக முதன்முறையாக தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கினார். பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், தி.மு.க., நகர் செயலாளர் சத்தியபிரகாஷ் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, பூபதி, முரளி செய்தனர்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியில் போலீசார்,பேரூராட்சி சார்பில் போதிய பாதுகாப்பு திட்டமிடல் இல்லாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
ஆற்றுக்குள் செல்லவும், வெளியேறவும் ஒரே பாதை என்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக சனீஸ்வரன் கோயில் எதிரே உள்ள படித்துறையை சீரமைத்து பயன்படுத்தி இருக்கலாம்.
குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோயிலில் பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு வைகை ஆற்றில் இறங்கினார். ஏற்பாடுகளை தக்கார் மாலதி, செயல் அலுவலர் கார்த்திகை செல்வி செய்திருந்தனர்.
விடிய விடிய அன்னதானம்
வலையங்குளம் தனிலிங்க பெருமாள் கோயிலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு விடிய விடிய அன்னதான விருந்து நடந்தது. நள்ளிரவில் பொதுமக்கள் கோயிலில் இருந்து திரி எடுத்து வைகை ஆற்றுக்கு சென்று அதிகாலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அன்னதானம் முடிந்து 2 நாட்களுக்கு பின்பு மழை பெய்யும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை.