/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆடிப்பட்ட விதைப்பு: மழை எதிர்பார்ப்பு
/
ஆடிப்பட்ட விதைப்பு: மழை எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 28, 2025 03:32 AM
பேரையூர், : பேரையூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்கள் உள்ளன. பருவ மழையை மட்டுமே நம்பி உள்ள மானாவாரி நிலங்களில் சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்யப்படும்.
தண்ணீர் செழிப்பான இறவை பாசன நிலங்களில் நெல், கரும்பு, வாழை மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. சில மாதங்களாக வாட்டி வதைத்த கோடை வெயிலால் விவசாயிகள் பலர் தங்கள் நிலங்களில் சாகுபடியை தவிர்த்து, உழவு செய்தும் இயற்கை உரங்களை இட்டும் நிலங்களை பண்படுத்தி, வளமூட்டி வந்தனர். இதனை சாதகமாக்கி சாகுபடி பணிகளை துவக்க விவசாயிகள் சிலர் விதைப்பு காலத்தை எதிர்நோக்கி உள்ளனர். ஆடிப்பட்டம் விதைப்புக்கேற்ற காலம் என்பதால் பெரிதும் ஆவலுடன் உள்ளனர். ஆனால் வறண்ட காற்றின் வேகம் அதிகம் உள்ளது. விதைப்புக்கான மழை பெய்யும் அறிகுறி இல்லை.
விவசாயிகள் சிலர் கூறுகையில், ''நிலத்தில் ஆட்டுக்கிடை போட்டு, உழவு செய்து, விதைப்புக்கு நிலத்தை தயார் படுத்தி வைத்துள்ளோம். மழையை எதிர்நோக்கி உள்ளோம். மழை பெய்தால் பருத்தி, பாசி, உளுந்து, மக்காச்சோளம், குதிரைவாலி, சோள பயிர்களை விதைக்க தயார் நிலையில் உள்ளோம்'' என்றனர்.