ADDED : ஜன 09, 2025 05:25 AM
பயிற்சி பட்டறை
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு கணினி அறிவியல் துறை சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது. தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். துறை தலைவர் தேவிகா வரவேற்றார். டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியாளர் ரேணுகாதேவி பேசினார். பேராசிரியர்கள் ஹேமாவதி, மதுமிதா ஒருங்கிணைத்தனர்.
மாணவர்களுக்கு பாராட்டு
பேரையூர்: மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி ஈரோட்டில் நடந்தது. இதில் சேடப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 9,10ம் வகுப்பு மாணவர்கள் தோற்பாவை கூத்தில் மாநில அளவில் 2ம் இடம் பெற்றனர். அவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர் சிவாவையும் தலைமை ஆசிரியர் செந்தில்வேல் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்தினர்.
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
திருவேடகம்: விவேகானந்த கல்லுாரியில் அகத்தர மதிப்பீட்டு மையம் சார்பில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி அத்யாத்மானந்த முன்னிலை வகித்தனர்.
மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு வரவேற்றார். காமராஜர் பொறியியல் கல்லுாரி இயந்திரப் பொறியியல் துறை இணை பேராசிரியர் நாராயணசாமி ஆராய்ச்சி வெளியீடு மற்றும் நெறிமுறைகள் என்ற தலைப்பில் பேசினார். விலங்கியல் துறை உதவி பேராசிரியர் காமாட்சி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நுாலகர் பிரபாகரன் நன்றி கூறினார்.
மாணவருக்கு நிதியுதவி
டி.கல்லுப்பட்டி: வில்லுார் ராமர் மகன் அர்வின். மதுரை கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் பரிதவிப்பில் இருந்தார். புற்றுநோய்க்கு தாய் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெற்றோரால் கல்விக்கட்டணம் செலுத்த இயலவில்லை. இதையறிந்த கல்லுப்பட்டி வட்டார நண்பர்கள் அமைப்பின் தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் விஜயபார்த்திபன் ஆகியோர் மாணவருக்கு கல்வி கட்டணம் ரூ.19 ஆயிரத்தை வழங்கினர்.
விழிப்புணர்வு வாக்கத்தான்
மதுரை: சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை, மத்திய சுற்றுச்சூழல் மையம் சார்பில் சுற்றுச்சூழல் கல்வித் திட்டம் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி எம்.எல்.டபுள்யூ., மேல்நிலை பள்ளியில் இருந்து துவங்கியது. போக்குவரத்து உதவி கமிஷனர் இளமாறன் துவக்கி வைத்தார்.
மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் வரவேற்றார். திலகர்திடல் இன்ஸ்பெக்டர் அழகர், உதவி தலைமையாசிரியர் முத்துசெல்வம் முன்னிலை வகித்தனர். பசுமை படை மாணவர்கள், ஆசிரியர்கள் ஊர்வலம் சென்றனர். பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.