ADDED : ஜூலை 24, 2025 04:36 AM
போக்குவரத்து விழிப்புணர்வு
மதுரை: செந்தமிழ்க்கல்லுாரியில் திலகர் திடல் போக்குவரத்து போலீசார் சார்பில் போக்குவரத்து, பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் தங்கமணி, சாலை விதிகளை பின்பற்றி விபத்தை தவிர்ப்பது குறித்து பேசினார். மேலும் அலைபேசி மூலம் நடக்கும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முதல்வர் தேவி, எஸ்.ஐ., பாண்டியராஜன் பங்கேற்றனர்.
புகழஞ்சலி
மதுரை: 'சுதந்திரம் எனது பிறப்புரிமை, அதனை அடைந்தே தீருவேன்' என முழங்கிய பால கங்காதர திலகரின் 170-ஆவது பிறந்த தினம் மற்றும் பாரத மாதாவிற்கு கோயில் எழுப்பிய தியாகியும், சேதுபதி பள்ளியின் முன்னாள் மாணவருமான சுப்பிரமணிய சிவாவின் நுாற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இருவரின் படங்களுக்கு தலைமையாசிரியர் நாராயணன், மதுரைக் கல்லுாரி வாரிய உறுப்பினர் இல. அமுதன், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மரியாதை செலுத்தினர்.
சொற்பொழிவு
மதுரை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் முதுநிலை ஆராய்ச்சி இயற்பியல் துறை சார்பில் 'செயற்கை சூரியன்' எனும் தலைப்பில் சொற்பொழிவு நடந்தது. சேர்மத்தாய் வாசன் கல்லுாரியின் முதல்வர்(பொறுப்பு) கவிதா அணுக்கரு இணைவின் மூலமாக செயல்படும் ஐ.டிஇ.ஆர்., திட்டம் குறித்த சர்வதேச முயற்சிகள் குறித்து பேசினார். மாணவர்கள் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பங்களிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். உதவிப்பேராசிரியர் புஷ்பம், துறைப்பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.
நுாலகத்துடன் ஒப்பந்தம்
மதுரை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தலைமை நுாலகர் தினேஷ்குமார், கல்லுாரி சார்பில் முதல்வர் (பொறுப்பு) ராஜேஸ்வர பழனிசாமி ஒப்பந்தம் செய்தனர். கல்லுாரி நிகழ்வுகளுக்காக நுாலக அரங்குகளை சலுகையாக வழங்குதல், மாணவர்கள் கல்லுாரி அடையாள அட்டை பயன்படுத்தி புத்தகங்களை அபராதத்தொகை இல்லாமல் 60 நாட்களுக்கு பயன்படுத்தும் வசதி அதில் இடம்பெற்றிருந்தன. துணைத் தலைமை நுாலகர் சந்தானக்கிருஷ்ணன், துணை முதல்வர் செல்வமலர், ஆராய்ச்சி, வெளியீடு இயக்குநர் பிரடெரிக், நுாலகர் சீதாலட்சுமி, வேலைவாய்ப்பு இயக்குநர் ஸ்ரீதர் உடனிருந்தனர்.