ADDED : ஆக 14, 2025 03:05 AM
நுாலக தின விழா
மதுரை: சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி நுாலகத்தில் கல்லுாரி துணைத் தலைவர் குழந்தைவேல் தலைமையில் தேசிய நுாலக தின விழா நடந்தது.ஹிந்தி விரிவுரையாளர் பூம்பாவை வரவேற்றார். திருவேடகம் விவேகானந்தர் கல்லுாரி நுாலகர் பிரபாகரன், 'நுாலகங்கள் உங்கள் அறிவுக்கான நுழைவாயில்' என்ற தலைப்பில் பேசினார். முதல்வர் கவிதா, நுாலக கமிட்டி ஆலோசகர் ரஞ்சனி உடன் இருந்தனர்.
வழிகாட்டல் நிகழ்ச்சி
மதுரை: கே.எல்.என்., பொறியியல் கல்லுாரியில் முதலாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி, துவக்க விழா தலைவர் கே.என்.கே. கார்த்திக் தலைமையில் நடந்தது. முன்னாள் மாணவர் பாலசுப்ரமணியன், 'மாணவர்கள் தங்கள் அலைபேசியை ஆக்கப்பூர்வமான வேலைகளுக்கு மட்டும் பயன்படுத்தினால் நல்லது. செயற்கை நுண்ணறிவு திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்' என்றார். போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல்வர் ராம்பிரசாத், பேராசிரியர் சதீஷ்குமார், பேராசிரியர் ரவிக்குமார், நிர்வாகக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உடன் இருந்தனர்.
கண் பரிசோதனை முகாம்
மதுரை: செந்தமிழ்க் கல்லுாரி, வாசன் கண் மருத்துவமனை சார்பில் தேனுாரில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. தொழிலதிபர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமை வகித்தார். துணை மேயர் நாகராஜ் துவங்கினார்.கல்லுாரி முதல்வர் சாந்திதேவி, துணை முதல்வர் சுப்புலட்சுமி, ஊராட்சி முன்னாள் தலைவர் மாயாண்டி, அன்பு முத்துச்சாமி பேசினர். மருத்துவமனை பி.ஆர்.ஓ., தொல்காப்பியன், மருத்துவக் குழுவினர் பங்கேற்றனர்.
என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் பூங்கோதை, செல்வத்தரசி, தண்டீஸ்வரன், சமூக ஆர்வலர் கார்த்திகேயன், திட்ட அலுவலர்கள் நேருஜி, கோகிலா, அதிவீரபாண்டியன் உடன் இருந்தனர்.
விழிப்புணர்வு கருத்தரங்கு
வாடிப்பட்டி: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. தலைமை ஆசிரியர் இனிகோ எட்வர்ட் ராஜா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அங்காளஈஸ்வரி, எஸ்.ஐ.,திவ்யா முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் விஜய்ரங்கன் வரவேற்றார். பள்ளி சிறார் நலத்திட்ட மருத்துவர் மகேஷ்குமார், பாதிரியார் சாம்பால், போதை மறுவாழ்வு மையத்தினர் பாண்டியன், கார்த்திக் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர் இளஞ் செழியன், பாலமுருகன், சகுந்தலா தேவி பங்கேற்றனர்.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
மதுரை: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி இயற்கை வளப் பாதுகாப்புக் குழு மாணவர்கள் சார்பில் ஆண்டிபட்டி வேலப்பர் கோயில், அதை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் 4 நாள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முதல்வர் பால்ராஜ், ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், பயிற்சியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் மாணவர்களை வழிநடத்தினர். வனப் பகுதியில் சேர்ந்த பிளாஸ்டிக் குப்பை அகற்றப்பட்டது. கருமாத்துார் அருளானந்தர், கும்பகோணம் அன்னை கல்லுாரி மாணவர்களும் பங்கேற்றனர்.
மாணவர்கள் பார்லிமென்ட்
மதுரை: இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பார்லிமென்ட், மாதிரி தேர்தல் நடந்தது. 21 மாணவர்கள் போட்டியிட்டனர். அதிக ஓட்டுகள் பெற்றவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். மாதிரி பார்லிமென்ட் அமைத்து அமைச்சர்கள் தேர்வு நடந்தது. குழந்தைகள் உரிமை, தனித்திறமை, தலைமைத்துவ பண்பு வளர்த்தல், சமூக பங்களிப்பு ஆகிய திறமைகளை வளர்க்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப் பட்டது. ஏற்பாடுகளை எச்.சி.எல்., பவுண்டேஷன், ஆபா நிறுவனம் செய்தது. ஆசிரியர்கள், பவுண் டேஷன் நிர்வாகிகள் முத்துக்குமார், ஆசிக் வசீர், கார்த்திகா, தர்ஷினிபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு வரவேற்பு
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி சுயநிதிப் பிரிவு இளங்கலை கணினி அறிவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன் பேசினார். மாணவி சண்முகப்பிரியா வரவேற்றார். சீனியர், ஜூனியர் மாணவர் களின் கலை நிகழ்ச்சிகள், புதிய மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மதிய உணவு வழங்கப்பட்டது. மாணவி தாரணி நன்றி கூறினார். பேராசிரியர் கணேஷ்பாபு ஒருங்கிணைத்தார்.
மாதிரி பார்லிமென்ட்
திருநகர்: முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தலைமை பண்புகளை வளர்க்கவும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், சரியான முடிவு எடுக்கவும், எதிர்காலத்தில் வெற்றிகரமாக திட்டமிடுவதற்காகவும் மாதிரி பார்லிமென்ட் தேர்தல் நடத்தப்பட்டது. பிரதமர், துணை பிரதமர், அமைச்சர்களாக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், இயக்குனர் நடன குருநாதன், தலைமை ஆசிரியர் ஆனந்த், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
உறுதிமொழி ஏற்பு
மதுரை: புதுார் அல்அமீன் மேல்நிலைப் பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு, மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ஷேக்நபி தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர்கள் ஜாகீர் உசேன், அல்ஹாஜ் முகமது, ஆசிரியர்கள் தமிழ்க்குமரன், நுாருல்லா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
தமிழ் கனவு விழா
திருப்பரங்குன்றம்: தமிழக அரசின் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விழா மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நடந்தது. மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ. அன்பழகன், ஆர்.டி.ஓ., சிவ ஜோதி முன்னிலை வகித்தனர்.
தமிழக அரசின் திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேசினார். தமிழ் பெருமிதம் என்ற நுாலின் கருத்தை பேசிய மாணவர்களுக்கு 'பெருமிதச் செல்வன்' என்ற விருதும், மாணவியருக்கு 'பெருமித செல்வி' என்ற விருதும் வழங்கப்பட்டது. வினாக்கள் எழுப்பிய சிறந்த 10 மாணவர்களுக்கு 'கேள்வியின் நாயகன்' என்ற விருதும், மாணவியருக்கு 'கேள்வியின் நாயகி' விருது வழங்கப்பட்டது. மீனாட்சி மகளிர் கல்லுாரி முதல்வர் வானதி, சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரி தமிழ்த் துறை தலைவர் ராமமூர்த்தி ஒருங்கிணைத்தனர். விழா ஒருங்கிணைப்பாளர் அழகேசன் ஏற்பாடுகள் செய்தார். பேராசிரியர் ரஞ்சித் குமார் தொகுத்துரைத்தார். மன்னர் கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா நன்றி கூறினார்.