ADDED : ஜன 29, 2025 07:03 AM

சோழவந்தான், ஜன.29-
சோழவந்தான் சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் வாகன 'பார்க்கிங்' பகுதியாக மாறி வருகிறது.
இப்பள்ளி வளாகத்தில் இருந்த பழுதடைந்த வகுப்பறை கட்டடம், சுற்றுச்சுவர்கள் அகற்றப்பட்டது. தற்போது பள்ளியை சுற்றி 3 பக்கமும் சுற்றுச்சுவர்கள் இல்லை. ரயில்வே மேம்பால இறக்கத்தில் உள்ள இப்பள்ளி அருகே வாடிப்பட்டி பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.
சுற்றுச்சுவர் இல்லாததால் இப்பகுதியினர் கார், டூவீலர்களை நிறுத்தி வருகின்றனர். தினமும் இரவு, விடுமுறை நாட்களில் பகலிலும் பள்ளி வகுப்பறை வராண்டாக்களை சமூக விரோதிகள் மது அருந்தும் 'பாராக' பயன்படுத்துகின்றனர்.
இங்குள்ள சமையலறை 'தகர செட்' வழியாக கட்டடத்தின் மாடிக்கு சென்று மது அருந்துகின்றனர்.
இதனால் அருகே உள்ள குடியிருப்பு வாசிகள் நிம்மதி இழந்துள்ளனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

