ADDED : மே 16, 2025 03:23 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் பவள விழா கண்ட அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தை பார் மற்றும் விடுதியாக பயன்படுத்துவதால் சமூக ஆர்வலர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இப்பள்ளியில் 850 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு 2 ஆண்டுகளாக இரவுக் காவலர் இல்லை. சில மாதங்களுக்கு முன் பள்ளி வளாகத்தில் இருந்த 10 கண்காணிப்பு கேமராக்கள் திருடு போயின. ஜன்னல் 'ஸ்லாப்புகளை' உடைத்து கான்கிரீட் கம்பிகளை திருடிச் சென்றனர்.
பிரதான கட்டடம் தவிர்த்து மற்றொரு கட்டடத்தில் உள்ள வகுப்பறை வராண்டாக்களை, இரவு நேரம் அமர்ந்து மது அருந்தும் 'பாராக' பயன்படுத்துகின்றனர்.
அவர்களில் சிலர் மது பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். மறுநாள் பள்ளிவரும் மாணவர்கள் காயமடைகின்றனர். மது மட்டுமின்றி, சிலர் மொட்டை மாடிக்கும் சென்று 'தகாத' செயல்களிலும் ஈடுபடுகின்றனர். காலையில் நடைப் பயிற்சி செல்வோர், விளையாட்டு வீரர்கள் பாட்டில்கள் உட்பட விரும்பத்தகாத பொருட்கள் கிடப்பதைப் பார்த்து முகம் சுளிக்கின்றனர். பள்ளிக்கு இரவு காவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.