சர்வதேச கருத்தரங்கு
மதுரை: அமெரிக்கன் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் 'டிஜிட்டல் யுகத்தில் வணிகம் மற்றும் மேலாண்மை போக்குகள் சவால்கள், கண்டுபிடிப்புகள்' என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். துணைமுதல்வர் மார்டின் டேவிட் வரவேற்றார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைமை நிர்வாகி டேவ் கிரேன், கல்லுாரி சேட்டிலைட் வளாக இயக்குநர் பால் ஜெயகர், இலங்கை பேராசிரியர் நாகலிங்கம் உள்ளிட்டோர் பேசினர். 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாநாட்டின் இணை ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் அன்புசெல்வன் நன்றி கூறினார்.
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்
சிலைமான்: மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி. நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் தலைவர் மோகனா தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். ஆசிரியை மனோன்மணி வரவேற்றார். கூட்டத்தில் பள்ளி வளர்ச்சிக்கான கட்டமைப்பு, மாணவர்கள் வளர்ச்சிக்கான மொழித் திறன் வளர்ப்பு, இடைநின்ற குழந்தைகள் விபரம், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவிகள், புதிய பாரத எழுத்தறிவு திட்டம், கணினி வழி கல்வி, கூடுதல் வகுப்பறை தேவை போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாணவர்களின் திறமைகளை வெளிகாட்டும் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தங்கள் செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டனர். ஆசிரியை அருவகம் தொகுத்து வழங்கினார். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் சங்கீதா நன்றி கூறினார்.
அறிவியல் கண்காட்சி
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் கிராமப்புற மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. காந்திகிராம கிராமிய பல்கலை வேதியியல் துறை தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். முதல்வர் வெங்கடேசன், செயலாளர் சுவாமி வேதானந்த, குலபதி அத்யாத்மானந்த முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் வரவேற்றார். 54 கிராமப்புற பள்ளிகளில் இருந்து 2500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், 166 ஆசிரியர்கள், 31 பொது பார்வையாளர்கள் பங்கேற்றனர். இதில் 24 அரசு பள்ளி மற்றும் 29 தனியார், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 67 அறிவியல் படைப்புகளை காட்சி படுத்தினர். துறைத் தலைவர் சேர்வாரமுத்து, உதவி பேராசிரியர் காமாட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.