ADDED : பிப் 23, 2024 06:17 AM
சர்வதேச கருத்தரங்கு
மதுரை: காமராஜ் பல்கலை தமிழியல் துறை, கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை, துபாய் உலக தமிழர் இணைய வழிப் பேரவை, அஸிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ், பிரான்ஸ் சர்வதேச தமிழ் வானொலி, உகாண்டா தமிழ்ச் சங்கம் உள்ளிட்டவை சார்பில் உலகத் தாய் மொழி நாளையொட்டி இணையவழியில் 14 மணிநேரம் கருத்தரங்கு நடந்தது. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி. சந்தோஷம் தலைமை வகித்தார். துணைவேந்தர் குமார், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பஞ்சநாதம் உள்ளிட்டோர் பேசினர். தமிழியல் துறைத் தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். 40 நாடுகளை சேர்ந்த 82 தமிழ் அறிஞர்கள், துணைவேந்தர்கள், தொழிலதிபர்கள், நீதிபதிகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முகமது முகைதீன் நன்றி கூறினார்.
விழிப்புணர்வு ஊர்வலம்
மதுரை: யாதவா கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் கூலப்பாண்டி கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதல்வர் ராஜூ தலைமை வகித்தார். துறைத் தலைவர் ராஜகோபால் வரவேற்றார். முன்னாள் செயலாளர் நவநீதகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பொருளாளர் கிருஷ்ணவேல், கொடிமங்கலம் ஊராட்சி துணைத்தலைவர் ஆனந்தவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர் பிரகதீஸ்வர் நன்றி கூறினார்.
தாய்மொழி தினம்
மதுரை: ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் மன்றம் சார்பில் தமிழ்க்கூடல் மற்றும் உலக தாய் மொழி தினவிழா தலைமையாசிரியை சசித்ரா தலைமையில் கொண்டாடப்பட்டது. திருஞானம் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் சரவணன் பேசினார். ஆசிரியை மேகலாலட்சுமி தொகுத்து வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை ஜெயமங்களம் நன்றி கூறினார்.
* இளமனுார் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் உலகத் தாய்மொழி தினவிழா உதவி தலைமையாசிரியை தேவி தலைமையில் கொண்டாடப்பட்டது. மாணவர் ஏழுமலை வரவேற்றார். தமிழாசிரியர் மகேந்திரபாபு பேசினார். மாணவர்கள் சூர்யா, ஹரிஹரன், பாண்டியராஜ் கவிதை வாசித்தனர். விமலி பைரவி பாடினார். மாணவர்களுக்கு புத்தகம் பரிசு வழங்கப்பட்டன. மாணவர் அருண்பாண்டி நன்றி கூறினார்.
தமிழ் மொழிக்கு அழிவில்லை
மதுரை: மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில், உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மொழிநாள் விழா தமிழாய்வுத் துறைத் தலைவர் யாழ் சந்திரா தலைமையில் நடந்தது. இதில் 'இணையத்தில் தமிழ்' என்ற தலைப்பில் தேனி எழுத்தாளர் சுப்பிரமணி பேசுகையில், உலக மொழிகளில் 162 மொழிகள் இணையத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் உள்ளன. ஆங்கிலம் முதலிடத்தில் உள்ளது. இந்திய மொழிகள் அனைத்தும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளன. உலக மொழிகள் பயன்பாட்டில் 20வது இடத்தில் உள்ள தமிழ், இணையத்தில் 60வது இடம் பிடித்து பின்தங்கியுள்ளது. இருப்பினும் தன்னை உயிர்ப்பித்துக்கொண்டு வருகிறது. தமிழ் மொழிக்கு அழிவில்லை. அனைத்து வகை இணைய பயன்பாட்டிலும் தமிழை அதிகம் பயன்படுத்த இளைஞர் சமுதாயம் முன்வரவேண்டும் என்றார். கவுரவ விரிவுரையாளர் சத்யா தொகுத்து வழங்கினார். இணைப்பேராசிரியர் சத்யா நன்றி கூறினார்.
பேரிடர் மேலாண்மை கருத்தரங்கம்
திருமங்கலம்: அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, நாட்டு நலப்பணித் திட்டம் மதுரை காமராஜ் பல்கலை சார்பில் பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி விழிப்புணர்வு கருத்தரங்கம் திருமங்கலம் அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. துணைவேந்தர் குமார் துவக்கினார். முதல்வர் அப்துல் காதிர் வரவேற்றார். தாளாளர் எம்.எஸ்.ஷா., மாநில என்.எஸ்.எஸ்., அலுவலர் செந்தில்குமார், பல்கலை என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் பாண்டி பேசினர். கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலுவலர் முனியாண்டி, பேராசிரியர்கள் ராஜ்குமார், கார்த்திகா பங்கேற்றனர்.
கலைப்போட்டிகள்
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி ரோட்டரி சங்கம், ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3000, ரோட்டரி மாவட்ட அமைப்பு மற்றும் மதுரை டவுன் டவுன் ரோட்டரி சங்கம் நிதியுதவியுடன் மாமதுரை கலைத்திருவிழா, இது நம்ம திருவிழா என்ற தலைப்பில் கலைப்போட்டிகள் நடந்தன. செயலாளர் விஜயராகவன் துவக்கி வைத்தார். முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். சுயநிதிப் பிரிவு இயக்குநர் பிரபு வரவேற்றார். ரோட்டாரி சங்க நிர்வாகிகள் சண்முகவேல், நெல்லைபாலு, சுனீல் கவுதமராஜ் கலந்துக்கொண்டனர். 26 கல்லுாரிகளைச் சேர்ந்த 426 மாணவர்கள் பங்கேற்றனர். முதலிரண்டு இடங்களை வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் அஜய், ஷீஹரி, சூரியபிரகாஷ், அப்துல் பாசீஸ் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.
வேலைவாய்ப்பு முகாம்
திருமங்கலம்: கப்பலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. முதல்வர் லட்சுமி தொடங்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி, அலுவலர்கள் ஒருங்கிணைத்தனர். 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 180 மாணவர்களை தேர்வு செய்தன.
மாணவிகளுக்கு பாராட்டு
அழகர்கோவில்: சுந்தரராஜா உயர்நிலைப்பள்ளி மாணவியர்கள் எச்.சி.எல் சார்பில் சென்னையில் நடந்த மாநில மகளிர் கையுந்து பந்து போட்டியில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் முதலிடத்தை பிடித்தனர். மாணவிகள் அஸ்வதி ஸ்ரீ, பிரியதர்ஷினி, சுசீலா, சசியா தேசிய போட்டிக்கு தகுதிபெற்றனர். அவர்களை கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் கலைவாணன் பாராட்டினார்.