ADDED : மார் 21, 2025 04:05 AM
நிறுவனர் ஜெயந்தி விழா
சோழவந்தான்: விவேகானந்த கல்லுாரியில் நிறுவனர் ஜெயந்தி விழா, கல்லுாரி ஆண்டு விழா நடந்தது. துணை முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். முதல்வர் வெங்கடேசன் ஆண்டறிக்கை வாசித்தார். பாரதிதாசன் பல்கலை ராம்கணேஷ் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். செயலாளர் சுவாமி வேதாந்த, சுவாமி அத்யாத்மானந்த பங்கேற்றனர். தமிழ்த்துறை தலைவர் ராமர் நன்றி கூறினார்.
கருத்தரங்கம்
மேலுார்: அழகர்கோவில் சுந்தரராசா உயர்நிலை பள்ளியில் பெண் குழந்தைகள், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பெண் குழந்தைகளுக்கு வரக்கூடிய பிரச்னை, அவற்றை எதிர்கொள்வது குறித்து எடுத்துரைத்தார். கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் ஏற்பாட்டை செய்திருந்தார். தன்னார்வலர் ராஜாராம் நோபல், அப்பன் திருப்பதி எஸ்.ஐ., சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் செல்வராஜ் நன்றி கூறினார்.
விழிப்புணர்வு கூட்டம்
உசிலம்பட்டி: கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. உடற்கல்வி இயக்குனர் வனிதா வரவேற்றார். முதல்வர் அன்பரசு, இணை முதல்வர் சுந்தரராஜ், சிறப்பு விருந்தினராக மதுரை சைபர் கிரைம், பெண்கள், குழந்தை நல குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் பங்கேற்றனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், அவற்றை புகார் செய்வதற்கான வழிமுறைகள், அதற்கான தண்டனை குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். கணினி அறிவியல் துறைத் தலைவர் மனோஜ் பிரபாகரன் நன்றி கூறினார்.
கல்வி உதவித்தொகை வழங்கல்
திருப்பரங்குன்றம்: சவுராஷ்டிரா கல்லுாரியில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. ஸ்ரீ ராஜம் ஜி.வி.ஆர். எஜுகேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் கல்லுாரியில் 46 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 330ஐ அருப்புக்கோட்டை ஒன்றிய முன்னாள் சேர்மன் சுப்புராஜ், டிரஸ்ட் பொருளாளர் கவிதா, உறுப்பினர்கள் ஜெயசீலன், சுப்பா ரெட்டியார் ஆகியோர், கல்லுாரிச் செயலாளர் குமரேஷ், முதல்வர் சீனிவாசனிடம் வழங்கினர்.
செயலாளர் குமரேஷ் பேசுகையில், 'உதவித்தொகை பெறும் மாணவர்கள் படிப்பில் முழுக் கவனம் செலுத்தி சிறந்த மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, வேலைக்கு சேர்ந்த பின்பு ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும்'' என்றார். கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர்கள் பன்சிதர் , வெங்கடேஸ்வரன், முரளிதாஸ், ராமசுப்பிரமணியன் பங்கேற்றனர். வணிகவியல் துறை தலைவர் துரைச்சாமி நன்றி கூறினார்.
என்.எஸ்.எஸ்., முகாம்
திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி நாட்டு நலப் பணி திட்டம் சார்பில் ஓ.ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், கொம்பாடி கிராமங்களில் ஏழு நாட்கள் என்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. 150 மாணவர்கள் அப்பகுதிகளில் துாய்மை பணிகள், யோகா, உடல் ஆரோக்கிய பயிற்சிகள், விழிப்புணர்வு ஊர்வலங்கள், கலந்துரையாடல்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். நிறைவு விழாவில் முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் முன்னிலை வகித்தார். சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி பேசினார். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்கள் சிலம்பரசன், செந்தில்குமார், வெங்கடேஷ் பாரதி முகாம் ஏற்பாடுகள் செய்தனர்.
அறிவியல் கண்காட்சி
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வட்டார வள மையத்தில் வட்டார அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. மைய மேற்பார்வையாளர் ரவி கணேஷ் தலைமை வகித்தார். இதில் 14 நடுநிலை பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் தங்களுடைய நீர் மேலாண்மை குறித்த படைப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் எட்டி மங்கலம், எம் .வெள்ளாளபட்டி, குன்னாரம்பட்டி பள்ளிகள் பரிசுகளை வென்றனர். ஆசிரியர் பயிற்றுநர் விஜயலட்சுமி கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.