ADDED : அக் 29, 2025 07:38 AM
கருத்தரங்கு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரியில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை நிதி உதவியுடன் 2 நாட்கள் தேசிய அறிவியல் கருத்தரங்கு நடந்தது. 'பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கை கல்லுாரி முதல்வர் சந்திரன் துவக்கி வைத்தார். துணை முதல்வர் கணேசன் முன்னிலை வகித்தார். தாவரவியல் துறை தலைவர் வாசுதேவன் வரவேற்றார். புனே பி.எஸ்.ஐ., ஆராய்ச்சி நிலைய தலைவர் பெனியமின், ஐதராபாத் என்.பி.பி.ஜி.ஆர்., தலைமை விஞ்ஞானி சிவராஜ், காந்திகிராம பல்கலை பேராசிரியர் ராமசுப்பு, சென்னை பல்கலை பேராசிரியர் நாகராஜன் பேசினர்.
இந்தியா முழுவதிலும் இருந்து 150 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். பங்கேற்பாளர்களுக்கு ஐ.சி.ஏ.ஆர்., மூத்த விஞ்ஞானி ராஜேந்திரன் சான்றிதழ் வழங்கினார். டீன் கணேசன், கல்லுாரி தாவரவியல் துறை பேராசிரியர் சுரேஷ் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் ஆதி பெருமாள்சாமி நன்றி கூறினார்.
சைபர் கிரைம் விழிப்புணர்வு
மேலுார்: கிடாரிப்பட்டி லதா மாதவன் கல்வி நிறுவனங்கள், மதுரை மாவட்ட போலீஸ் இணைந்து நடத்திய சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் சைபர் கிரைம் போலீசார், கல்லுாரி நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கு பொறியியல் கல்லுாரி முதல்வர் சுடலைமணி தலைமை வகித்தார். சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் ரமேஷ் காணொலி காட்சி மூலம், 'சைபர் குற்றங்கள் அதிகரிப்பு, மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், அலைபேசியில் இருக்கும் தகவல்களை பாதுகாப்பது, குற்றங்கள் நடைபெறும் விதம், அதை தடுப்பது' குறித்து எடுத்துரைத்தார். குற்ற அழைப்புகள் வந்தால் 1930 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், எஸ்.ஐ., சுதர்சனா, செயல் அலுவலர்கள் முத்துமணி, பிரபாகரன், மீனாட்சி சுந்தரம், காந்தி நாதன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் பிரியா நன்றி கூறினார்.

