sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

எந்த துறையிலும் புதுமையாக சிந்தித்தால் வெற்றியாளராக ஜொலிக்கலாம் விஞ்ஞானி டில்லி பாபு பேச்சு

/

எந்த துறையிலும் புதுமையாக சிந்தித்தால் வெற்றியாளராக ஜொலிக்கலாம் விஞ்ஞானி டில்லி பாபு பேச்சு

எந்த துறையிலும் புதுமையாக சிந்தித்தால் வெற்றியாளராக ஜொலிக்கலாம் விஞ்ஞானி டில்லி பாபு பேச்சு

எந்த துறையிலும் புதுமையாக சிந்தித்தால் வெற்றியாளராக ஜொலிக்கலாம் விஞ்ஞானி டில்லி பாபு பேச்சு


ADDED : மார் 27, 2025 06:22 AM

Google News

ADDED : மார் 27, 2025 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: எந்த படிப்புகளை தேர்வு செய்தாலும் புதுமையாக சிந்திக்கும் திறன் இருந்தால் வெற்றியாளராக ஜொலிக்க முடியும் என மதுரையில் தினமலர், கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் துவங்கிய தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி கருத்தரங்கில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.,) விஞ்ஞானி டில்லி பாபு பேசினார்.

வழிகாட்டி நிகழ்ச்சி முதல் நாள் கருத்தரங்கில் 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' என்ற தலைப்பில் விஞ்ஞானி டில்லி பாபு பேசியதாவது:

மறைந்த அப்துல் கலாம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தை படித்த பின் தான் விஞ்ஞானி ஆகும் ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது. அதை படித்த பின் அவரை போல் விஞ்ஞானியாக சாதிக்க வேண்டும் என்ற இலக்கை ஏற்படுத்திக்கொண்டேன். புத்தகம் தான் என்னை மாற்றியது.நாட்டில் தற்போது மத்திய பாதுகாப்புத் துறைக்கு உட்பட்ட டி.ஆர்.டி.ஓ.,வின் கீழ் 50 ஆய்வுக் கூடங்கள் உள்ளன. ராணுவ டேங்க், கப்பல், நீர்மூழ்கி கப்பல் உட்பட தரை, ஆகாயம், கடல்சார் உபகரணங்கள், தளவாடங்கள் உள்ளிட்டவற்றை இந்த டி.ஆர்.டி.ஓ., உருவாக்குகின்றன. இதனால் முப்படைகளுக்கும் மூளையாக விளங்குகிறது. அத்துடன் பல்வேறு உயிர் காக்கும் உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளன.

ஒரு நாடு வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என்றால் பொருளாதாரத்துடன் அறிவியல் தொழில் நுட்பம், ராணுவ தொழில்நுட்பத்தில் முன்னேறியிருக்க வேண்டும். போர் விமான என்ஜினை தயாரிக்கும் ஆராய்ச்சி நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது. விரைவில் 5வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறவுள்ளது.மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், வேளாண்மை என எந்த படிப்புகளை படித்தாலும் புதுமையாக சிந்திக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். யார் முழுமையாகவும், புதுமையாகவும் சிந்திக்கிறார்களோ, புதுமையாக கற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் தான் வெற்றியாளராக ஜொலிக்கின்றனர். டி.ஆர்.டி.ஓ.,வில் உதவித் தொகையுடன் பணியாற்றும் வாய்ப்புகள் ஜெ.இ.இ., மெயின் தேர்வு எழுதி தேர்வாகி கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உள்ளது. ரூ.1.20 லட்சம் கல்வி உதவித் தொகை பெறும் வாய்ப்பு உள்ளது. மகாராஷ்டிரா ராணுவ கல்லுாரியில் ட்ரோன் டெக்னாலஜி படிப்பு உள்ளது. அதிலும் உதவித் தொகையுடன் படிக்கலாம். எந்த படிப்பு படித்தாலும் புதிய சிந்தனை இருந்தால் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கலாம். புதிய சிந்தனை திறமை இருந்தால் எதிர்காலத்தில் ஜொலிக்கலாம்.

திறமைகளை வளர்க்கும் கல்லுாரிகள்


சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சி.இ.ஓ., சுந்தரராமன் பேசியதாவது:

பிளஸ் 2வுக்கு பின் என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் என்பது ஒவ்வொரு மாணவருக்கும் கனவு. பெற்றோருக்கும் பல கனவு உண்டு. முதலில், என்ன படிக்கலாம் என உங்களுக்குள் ஓர் ஆராய்ச்சி செய்து கேள்விகேட்டுக் கொள்ளுங்கள். பல விடைகள் கிடைக்கும். எல்லா படிப்புகளும் சிறந்தது தான். எல்லா கல்லுாரிகளும் நல்ல கல்லுாரிகள் தான். ஆனால் பாடத்திட்டங்களில் அப்டேட் வேண்டும். மாணவர்களுக்கும் இதில் நல்ல புரிதல் வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக உயர்கல்வியில் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். குறிப்பாக கல்லுாரி பாடத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. படிப்பது என்பது வகுப்பறை மட்டுமல்ல. அதையும் தாண்டி வெளியே மாணவர்கள் எவ்வளவு திறமைகளை கற்றுக்கொள்கின்றனரோ அதை பொறுத்தே எதிர்காலம் அமையும்.

கல்லுாரியில் படிக்கும் போது தொழில்நிறுவனங்களுக்கு சென்று படிக்கும் வகையிலான கல்வி முறை நடைமுறையில் உள்ளது. அதை தாண்டி திறமை, கூடுதல் தகுதிகளை வளர்க்கும் ஆன்லைன் படிப்புகளையும் தேடிப் படிக்க வேண்டும். அதுவும் உங்கள் பட்டப் படிப்புக்கு பக்கதுணையாக இருக்கும்.

கல்லுாரியை தேர்வு செய்யும் போது அதுதொடர்பான முழு புரிதல் வேண்டும். மருத்துவம், பொறியியல், விளையாட்டு இசை என அனைத்து படிப்புகளுக்கும் எதிர்காலம் உள்ளது. மாணவர்கள் படிக்கும் போதே திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். கூடுதல் திறமையை வளர்க்கும் வாய்ப்புகளை கல்லுாரிகள் வழங்குகின்றனவா என்பதை பார்க்க வேண்டும். தொழில்நிறுவனங்கள் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்யுங்கள். இதுதொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பெற்றுள்ள கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள்.

வாழ்க்கைக்கான கல்வியை கற்றுக்கொடுக்கும் கல்லுாரிகள்


'ஐ.டி., கம்ப்யூட்டர், மிஷின் லேர்னிங், ஏ.ஐ., டேட்டா சயின்ஸ்' உள்ளிட்ட படிப்புகள் குறித்து அமிர்தா விஷ்வ வித்ய பீடம் இயக்குநர் பேராசியர் சிதானந்தமிர்தா சைதன்யா பேசியதாவது:

உலக அரங்கில் இந்திய பொறியாளர்களுக்கு மிகப் பெரிய மதிப்பு உள்ளது. டாக்டர், பொறியாளர் கனவு இல்லாத மாணவர்கள் ஐ.டி., கம்ப்யூட்டர், மிஷின் லேர்னிங், ஏ.ஐ., டேட்டா சயின்ஸ் போன்ற படிப்புகளை தேர்வு செய்யலாம். இத்துறையில் படிக்கும் அனைவருக்கும் வேலை உறுதி. தற்போது அமெரிக்க மின்னணு தொழிற்சாலை தலைமையகத்தில் பணியாற்றும் 7 ஆயிரம் பொறியாளர்களில் 4 ஆயிரம் பேர் இந்தியர்கள். கல்வியில் இரண்டு வகை உள்ளது. ஒன்று பிழைப்புக்கான கல்வி, மற்றொன்று வாழ்க்கைக்கான கல்வி. பிழைப்புக்கான கல்வியை கற்றுத்தர ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன. ஆனால் வாழ்க்கைக்கான கல்வியை கற்றுக்கொடுப்பவை சில கல்லுாரிகள் மட்டுமே. நாம் இரண்டாம் வகை கல்லுாரியை தேர்வு செய்ய வேண்டும். எந்த துறையாக இருந்தாலும் நேர்மையாக இருக்க வேண்டும். படிப்பு மட்டுமே பலன் தராது. உங்களின் தனித்திறன் அவசியம். வருங்காலத்தில் தொழில்நுட்ப வல்லுநர்களால் மிக முக்கியம் என கண்டுபடிக்கப்பட்ட துறைகளில் டேட்டா சயின்ஸ், சைபர் செக்கியூரிட்டி, மிஷின் லேர்னிங், ஏ.ஐ., நியூரோ ஐ.டி., 7ஜி கம்யூனிகேஷன் உள்ளிட்ட படிப்புகளை பட்டியலிட்டுள்ளனர். தனித் தன்மை, முயற்சி, ஈடுபாடு தான் உங்களை மேம்படுத்தும். அனைத்து துறைகளிலும் சிறந்த திறமையுள்ளவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கப்படும். அவர்களை வேலைக்கு எடுக்க நிறுவனங்களுக்குள் போட்டிகள் அதிகரித்துள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்ப்பது தகுதி, தனித்திறன், அர்ப்பணிப்பு, நேர்மை, மனித நேயம் ஆகியன தான்.

சி.ஏ., படித்தால் பல லட்சங்களில் சம்பளம் உறுதி


'சி.ஏ., படிப்பின் எதிர்காலம்' குறித்து ஐ.சி.ஏ.ஐ., தென் பிராந்திய கவுன்சில் உறுப்பினர் அருண் பேசியதாவது:

ஐ.சி.ஏ.ஐ., என்பது மத்திய அரசு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. நாட்டில் 150 கோடியை நெருங்கும் மக்கள் தொகையில் தற்போது மொத்தமே 4.10 லட்சம் சி.ஏ.,க்கள் உள்ளனர். இப்படிப்பை முடித்த உடன் சுயமாக ஆடிட்டராக தொழிலை தொடரலாம் அல்லது நிறுவனங்களில் ஆடிட்டராக பணியாற்றலாம். இது கடினமான படிப்பு அல்ல. தமிழ் மீடியம் படித்தாலும் எளிதில் இப்படிப்பை முடிக்க முடியும். டெக்னிக்கல் அறிவை மட்டுமே சோதிக்கும் படிப்பு. திறமையை மட்டுமே நிர்ணயிக்கும் படிப்பு இது. ஆண்டுக்கு 15 லட்சம் சி.ஏ.,க்கள் தேவையாக உள்ளனர். ஆனால் 4.10 லட்சம் பேர் தான் மொத்தமே உள்ளனர். இப்படிப்பை பிளஸ் 2 முடித்த பின் பவுண்டேஷன் கோர்ஸ் மூலம் துவங்கி இன்டர்மீடியேட், பைனல் தேர்வு எழுதலாம். தேர்வில் ஒரு பாடத்தில் (தாள்) தோல்வியுற்றால் அனைத்து பாடங்களையும் மீண்டும் எழுத வேண்டும். இன்டர்மீடியேட் முடிந்தால் படிக்கும்போதே இரண்டரையாண்டுகள் ஆடிட்டரிடம் பயிற்சி பெற வேண்டும். அப்போது உதவித் தொகை வழங்கப்படும். படிப்புக்கு தனியாக செலவிட தேவை இருக்காது. சி.ஏ., படித்தால் ரூ. 10 லட்சத்தில் இருந்து 30 லட்சம் வரை சம்பாதிக்கலாம். தற்போது திறமை உள்ள ஆடிட்டர்கள் மாதம் ரூ. 35 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். எந்த படிப்பை தேர்வு செய்தாலும் அதற்கான முயற்சி, உழைப்பு அவசியம். அதை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us