ADDED : ஆக 20, 2026 12:58 AM

வாடிப்பட்டி: பாலமேடு சாத்தையாறு அணையில் வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்கு வருவாய் மற்றும் நீர்வளத் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வண்டல் மண் எடுக்க 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். எட்டு விவசாயிகளுக்கு அனுமதி அளித்த நீர்வளத்துறை, வரிசைப்படி ஒவ்வொருவராக அள்ள வேண்டும் என்கிறது. இதனால் அனுமதி பெற்றும் வண்டல் மண் எடுக்க முடியாமல் போய்விடுமோ என விவசாயிகள் புலம்புகின்றனர்.
கெங்கமுத்துார் விவசாயி பாலகிருஷ்ணன் கூறியதாவது: நிலஅளவுக்கு ஏற்ப டிராக்டர்களில் மண் எடுக்க அனுமதி அளித்துள்ளனர். ஆக.14 முதல் நேற்று வரை 3 பேர்தான் மண் எடுத்துள்ளனர். கூடுதல் விவசாயிகளை அனுமதிக்க வேண்டும். மழை பெய்தால் மண் அள்ளும் பணி தடைபடும்.
எழுபத்து நான்கு லோடு அனுமதி பெற்றுள்ளேன். அதிகாரிகளிடம் கெஞ்சியும் அனுமதி மறுக்கின்றனர். மண் அள்ளும் பணியை மொத்தமாக நிறுத்தி விடுவோம் என்கின்றனர் என்றார்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''விவசாயிகளை வரிசைப்படி ஒவ்வொருவராகத்தான் அனுமதிக்க முடியும், ஊரையே அணைக்குள் விட முடியாது. மண் விவசாய நிலத்திற்கு தான் செல்கிறதா என்பதையும் கண்காணிக்க முடியாது. எங்களிடம் ஆட்கள் இல்லை'' என்றனர்.
