/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை சிறைக்கு செம்பூரில் இடம் தேர்வு
/
மதுரை சிறைக்கு செம்பூரில் இடம் தேர்வு
ADDED : பிப் 16, 2024 01:40 AM
மதுரை,:மதுரை மத்திய சிறையை இடையப்பட்டி, தெத்துாருக்கு இடமாற்றப்படும் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் மேலுார் அருகே செம்பூரில் 170 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.
தமிழகத்தில் 158 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை மத்திய சிறை இடநெருக்கடியை தவிர்க்க 23 கி.மீ., துாரத்தில் உள்ள இடையப்பட்டிக்கு மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால் அப்பகுதி பல்லுயிர் தளமாக கருதப்படுவதால் பாலமேடு அருகே தெத்துாரில் இடம் தேர்வு செய்யப் பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடத்தையும் கைவிட்ட அரசு, புறநகர் பகுதியில் புதிய இடங்களை தேர்வு செய்ய உத்தரவிட்டது.
முதற்கட்டமாக திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கரடிபட்டியில் இடம் பார்க்கப்பட்டது. இரண்டாவதாக சிவகங்கை மாவட்ட எல்லையான பூவந்தி அருகேயுள்ள பூஞ்சுத்தியில் 150 ஏக்கர் இடம் பார்க்கப்பட்டது. மூன்றாவதாக மேலுார் தெற்குத்தெரு அருகே செம்பூரில் 170 ஏக்கர் இடம் பார்க்கப்பட்டது. இதில் செம்பூரை தேர்வு செய்ய சிறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 170 ஏக்கரும் அரசு புறம்போக்கு என்பதால் எதிர்ப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
தவிர அரை கி.மீ., பயணம் செய்தால் மதுரை - திருச்சி நான்குவழிச் சாலையை அடைய முடியும். அங்கிருந்து 18 கி.மீ., துாரத்தில் அதிகபட்சம் 20 நிமிடத்தில் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு கைதிகளை அழைத்து செல்லும் வகையில் போக்குவரத்திற்கு ஏற்றதாக உள்ளது.
இதுகுறித்து அரசுக்கு சிறை நிர்வாகம் கருத்துரை அனுப்ப உள்ளது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் நிலம் ஒதுக்கி உத்தரவிடும். அதைத்தொடர்ந்து புதிய சிறை அமைக்க அரசாணை வெளியிடப்படும். நிதி ஒதுக்கீடும் செய்யப்படும். அதன் பிறகு புழல் சிறை கட்டமைப்பை அடிப்படையாக கொண்டு கட்டுமான பணி துவங்கப்படும்.