/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
துார்வாரப்படாததால் நிரம்பி வழியும் செல்லுார் கண்மாய்
/
துார்வாரப்படாததால் நிரம்பி வழியும் செல்லுார் கண்மாய்
துார்வாரப்படாததால் நிரம்பி வழியும் செல்லுார் கண்மாய்
துார்வாரப்படாததால் நிரம்பி வழியும் செல்லுார் கண்மாய்
ADDED : அக் 18, 2024 05:45 AM

மதுரை: மதுரை செல்லுார் கண்மாயைசரிவர துார்வாராததால் வரும் தண்ணீர் முழுவதும் வெளியேறி வருகிறது.
தொடர்ந்து பெய்த கனமழையில் மதுரையில் உள்ள கண்மாய்கள் நிரம்பியுள்ளன. பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் செல்லுார் கண்மாய் துார்வாரப்படாமல் ஆகாயத் தாமரை நிரம்பிகாட்சியளிக்கிறது. கண்மாய்க்கு வரும் மழைநீர் முழுதும் வெளியேறி வருகிறது.
இதுகுறித்து நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கத்தின் அபுபக்கர் கூறியதாவது:
230 ஏக்கர் பரப்பளவில் இருந்த செல்லுார் கண்மாயை சுற்றி முன்பு விவசாய நிலங்கள் இருந்தன. தற்போது விளைநிலங்கள் 'விலை' நிலங்களாக மாறி ஆக்கிரமிப்பால் கண்மாயின் பரப்பளவு சுருங்கி விட்டது.
தொடர்ந்து பெய்த மழையினால் குலமங்கலம், லட்சுமிபுரம், பூதகுடி, பனங்காடி, ஆனையூர், ஆலங்குளம், முடக்கத்தான், கரிசல்குளம், கூடல்நகர் பகுதிகளில் உள்ள கண்மாயில் இருந்து கடைமடை கண்மாயான இக்கண்மாய்க்கு நீர் வரத்து கிடைக்கிறது. எனினும் முறையாக துார்வாரப்படாமல் நிலப்பரப்பு மேடாக உள்ளதால் கண்மாய் நிரம்பவில்லை. வரும் தண்ணீர் முழுவதும் ஓடைவழியாக வைகை ஆற்றுக்குச் செல்கிறது.
மாநகராட்சி, நீர்வளத்துறை அதிகாரிகள் 5 மீ., ஆழத்திற்கு இக்கண்மாயை துார்வாரினால் தண்ணீரை தேக்குவதோடு படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்ய முடியும். இதனால் மாவட்ட நிர்வாகத்திற்கு வருமானமும் கிடைக்கும். 3 கி.மீ., பரப்பளவிற்கு நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.