ADDED : டிச 22, 2024 07:17 AM
மதுரை : மதுரைக் கல்லுாரியில் தமிழ்த் துறை, சாகித்ய அகாடமி சார்பில் குமரகுருபரரின் 400ம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு இரண்டு நாள் கருத்தரங்கு கல்லுாரி முதல்வர் சுரேஷ் தலைமையில் நேற்று துவங்கியது.
சாகித்ய அகாடமி செயலாளர் ஸ்ரீனிவாசராவ் வரவேற்றார். தஞ்சை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் திருமலை பேசியதாவது: இக்காலத்திற்கும் பொருத்தமுடைய குமரகுருபரர், மனித குலத்தின் முன்னேற்றத்திற்கான சாராம்சங்களை இலக்கியங்கள் மூலம் வழங்கியவர். பிற மொழிகளை கற்பதில் முன்னோடியாக திகழ்ந்தவர்.
வடமொழியையும் தமிழையும் சமன்செய்து 'தமிழே உயர்ந்தது' என உணர்த்தியவர். அவரது 'மெய்வருத்தம் பாரார் கண் துஞ்சார்' பாடலை விட சிறந்த தன்முன்னேற்றப் பாடல் வேறில்லை. தமிழை பாமரர்களும் பயன்படுத்தும் வண்ணம் எளிமைப்படுத்தியவர் என்றார்.
தமிழ்த்துறை தலைவர் தனசாமி நன்றி கூறினார். சாகித்ய அகாடமி தமிழ் ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர் தாமோதரன், மதுரைக் கல்லுாரி வாரியத் தலைவர் சங்கர சீத்தாராமன் பங்கேற்றனர்.