மக்கள் செலுத்தும் வரி திமுகவினருக்கு செல்கிறது: இபிஎஸ் குற்றச்சாட்டு
மக்கள் செலுத்தும் வரி திமுகவினருக்கு செல்கிறது: இபிஎஸ் குற்றச்சாட்டு
ADDED : செப் 03, 2025 08:40 PM

மதுரை: '' எல்லா துறைகளிலும் ஊழல் என்பதற்கு மதுரை மாநகராட்சியே ஒரு உதாரணம். மக்கள் செலுத்தும் வரியெல்லாம் தனி நபருக்குச் செல்கிறது, திமுகவினருக்குச் செல்கிறது'', என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
மக்கள் துன்பம்
'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் பேசியதாவது: கூட்டணிக் கட்சிகள் மூலம் வென்றுவிடுவோம் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார். இந்த திமுக ஆட்சியில் மக்கள் பட்ட துன்பம் ஏராளம். அவை எல்லாமே தேர்தலில் பிரதிபலித்து படுதோல்வி அடைவார். .
மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம். அதை செய்யத் தவறிவிட்டது. இதுதான் கையாலாகாத அரசு என்பதற்கு உதாரணம்.
ஊழலே சாட்சி
எல்லா துறைகளிலும் ஊழல் என்பதற்கு மதுரை மாநகராட்சியே ஒரு உதாரணம். மக்கள் செலுத்தும் வரியெல்லாம் தனி நபருக்குச் செல்கிறது, திமுகவினருக்குச் செல்கிறது. மதுரை மாநகராட்சியில் ஆளுங்கட்சி மேயர் 200 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக செய்தி வந்தது. அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேயரை கைது செய்யவில்லை, அவரது கணவரை மட்டும் கைது செய்தனர். இதற்கு யார் பொறுப்பு? மேயர் தானே, அவரை கைது செய்யவில்லை. அவரது கணவரையும் சாதாரண செக்ஷன்களில் கைதுசெய்து திமுக கண் துடைப்பு நாடகம் நடத்துகிறது.
வரி வசூல் பணத்தை இவர்கள் கொள்ளையடிக்கிறார்கள். பின்னர் மாநகராட்சிக்கு பணம் தேவை என்பதால் 260 கோடி ரூபாய் கடன் வாங்குகிறார்கள். இந்த கடனை யார் கட்டுவது? அதற்கும் வரி போடுவார்கள். இதுதான் ஊழல் அரசு என்பதற்கு சான்று.
அனைத்தும் பொய்
இப்போது ஸ்டாலின் வெளிநாடு போய்விட்டார். அவர் தொழில் முதலீட்டை ஈர்க்கப் போகவில்லை இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யப் போயிருக்கிறார். ஜெர்மனியில் 3200 கோடி ரூபாய் ஈர்த்ததாகச் செய்தி, ஏற்கனவே அதிமுக ஆட்சியில் அமைந்த தொழிற்சாலையை விரிவுபடுத்த ஜெர்மனிக்குச் சென்று ஒப்பந்தம் போடுகிறார்கள். ஒரே ஒரு நிறுவனத்துடன் ஆயிரம் கோடியில் புதிய ஒப்பந்தம் போட்டுள்ளனர். இப்படி மக்களை ஏமாற்றி ஈர்ப்பதாகச் சொல்லி பொய் செய்தி வெளியிடுகிறார்கள். திமுக ஆட்சியிலும் முதலீட்டாளர் மாநாடு நடத்தி ஒப்பந்தங்கள் போட்டனர், ஆனால் அவை இன்னும் நடைமுறைக்கே வரவில்லை. திமுக சொல்வது அத்தனையும் பொய். இவ்வாறு இபிஎஸ் பேசினார்.