/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிவுநீர், குப்பை சேர்ந்ததால் நிரம்பிய உசிலை கண்மாய்
/
கழிவுநீர், குப்பை சேர்ந்ததால் நிரம்பிய உசிலை கண்மாய்
கழிவுநீர், குப்பை சேர்ந்ததால் நிரம்பிய உசிலை கண்மாய்
கழிவுநீர், குப்பை சேர்ந்ததால் நிரம்பிய உசிலை கண்மாய்
ADDED : நவ 11, 2024 04:41 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகரின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது உசிலம்பட்டி கண்மாய். இது சமீபத்திய மழைநீருடன், கழிவுநீர், குப்பையும் சேர்ந்ததால் விரைவாக நிரம்பியுள்ளது.
உசிலம்பட்டி நகரின் மையப்பகுதியில் 30 ஏக்கரில் கண்மாய் உள்ளது. 15 ஆண்டுகளுக்குப்பின் இந்த பருவத்தில் கிடைத்த மழை காரணமாகவும், கடந்த 3 ஆண்டுகளாக 58 கிராம கால்வாயில் தண்ணீர் கிடைப்பதாலும், நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் மழைநீர் நிலத்தடிக்குள் அதிகம் செல்லவில்லை என்பதால் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.
அசுவமாநதியின் மூலம் கிடைத்த நீரால் மாதரை, கருக்கட்டான்பட்டி கண்மாய்கள் நிரம்பி மறுகால் மூலம், உசிலம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. இதனுடன் உசிலம்பட்டியின் மேற்குப்பகுதி 6 வார்டுகளின் கழிவுநீரும் கண்மாயில் கலக்கிறது.
அதேசமயம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கண்மாய் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கரைகளில் குவிக்கப்படும் குப்பை, கழிவுகள், சீமைக்கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை, காட்டுச்செடி கொடிகள் என கண்மாய் முழுவதும் நிரம்பியுள்ளது.
மழைக்காலத்திற்கு முன் நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இருப்பினும் மறுகால் செல்லும் பகுதியிலும்கூட சுத்தம் செய்யாத நிலை உள்ளது. மேற்கண்ட ஆக்கிரமிப்புகளால் விரைவாக கண்மாய் நிரம்பி மறுகால் செல்லத்துவங்கியுள்ளது.
இங்கிருந்து மறுகால் பாயும் நீரால், பூதிப்புரம், ஆனையூர் சின்ன, பெரிய கண்மாய்கள் வழியாக வாலாந்துார் கண்மாய்க்கு செல்லும். இந்த ஓடைகளும் புதர்மண்டியுள்ளது.
எப்போதாவது கிடைக்கும் மழைநீரை கண்மாயில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு நினைப்பே வராதா என பொதுமக்கள் ஏங்குகின்றனர்.