/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் போலீசை எரித்துக்கொன்றவர் மீது துப்பாக்கிச்சூடு; ‛திடீர் நட்பு' கேடாய் முடிந்தது
/
மதுரையில் போலீசை எரித்துக்கொன்றவர் மீது துப்பாக்கிச்சூடு; ‛திடீர் நட்பு' கேடாய் முடிந்தது
மதுரையில் போலீசை எரித்துக்கொன்றவர் மீது துப்பாக்கிச்சூடு; ‛திடீர் நட்பு' கேடாய் முடிந்தது
மதுரையில் போலீசை எரித்துக்கொன்றவர் மீது துப்பாக்கிச்சூடு; ‛திடீர் நட்பு' கேடாய் முடிந்தது
ADDED : மார் 25, 2025 07:49 AM

மதுரை; மதுரையில் போலீஸ்காரர் மலையரசன் 36, எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் மூவேந்திரன் 25, சம்பவ இடத்தில் கொலை செய்தது எப்படி என்பது குறித்து நடித்துக் காட்ட சென்றபோது எஸ்.ஐ., மாரிகண்ணனை 35, வெட்டிவிட்டு தப்ப முயன்றார். போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். இவ்வழக்கில் கொலைக்கு உடந்தையாக இருந்த மூவேந்திரனின் நண்பர் சிவாவும் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தனிப்படை போலீஸ்காரராக இருந்தவர் மலையரசன். இவரது மனைவி பாண்டிச்செல்வி 33. இரு மகன்கள் உள்ளனர். இம்மாத துவக்கத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு டூவீலரில் மனைவியுடன் மலையரசன் வீடு திரும்பினார். மானாமதுரை அருகே வாகனம் ஒன்று மோதியதில் பாண்டிச்செல்வி காயமுற்று மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இறந்தார்.
மருத்துவ ஆவணங்களை வாங்க மார்ச் 18 ல் மதுரை வந்த மலையரசன், ரிங் ரோடு ஈச்சனோடை அருகே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 5 நாட்கள் விசாரணைக்கு பிறகு வில்லாபுரம் ஆட்டோ டிரைவர் மூவேந்திரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பணத்திற்காக கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை நேற்று காலை 7:00 மணிக்கு கொலை நடந்த இடத்திற்கு திருமங்கலம் எஸ்.ஐ., மாரிகண்ணன் தலைமையிலான போலீசார் அழைத்துச்சென்று, கொலை செய்தது எப்படி என நடித்துக்காட்ட கூறினர்.
கூட்டாளியும் கைது
மூவேந்திரன் நடிப்பது போல் திடீரென அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி தப்ப முயன்றார். எஸ்.ஐ., மாரிகண்ணன் பிடிக்க முயன்றபோது இடது கையில் வெட்டிவிட்டு தப்பி ஓடியபோது பாதுகாப்பு கருதி சுட்டதில் மூவேந்தரனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தை எஸ்.பி., அரவிந்த் ஆய்வு செய்தார். இதற்கிடையே கொலைக்கு உடந்தையாக இருந்த கூட்டாளி சிவாவையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
மலையரசனின் வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ஒரே நேரத்தில் ரூ.80 ஆயிரம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தது. அந்த வங்கி கணக்கு வில்லாபுரம் மூவேந்திரன் உடையது. சந்தேகத்தின்பேரில் அவரை கண்காணித்தோம். அவரது ஆட்டோ, கொலை நடந்த மார்ச் 18 ம் தேதி ரிங் ரோட்டிலும், மண்டேலா நகர் பெட்ரோல் பங்கிற்கும் சென்றுவந்தது கண்காணிப்பு கேமரா மூலம் உறுதியானது. அவரை பிடித்து விசாரித்தபோது பணத்தேவைக்காக கொலை செய்ததாக கூறினார்.
ஒரு நாள் நட்பு
மார்ச் 18 ம் தேதி மதுரை வந்த மலையரசன், பீபிகுளத்தில் நண்பர் ஒருவரை சந்தித்துவிட்டு அவ்வழியே வந்த வில்லாபுரம் மூவேந்திரனின் காஸ் ஆட்டோவில் சவாரி சென்றார். மூவேந்திரனின் நண்பர் சிவாவும் 25, உடன் இருந்தார். ஏற்கனவே போதையில் இருந்த மலையரசன், தனது மனைவி இறப்பு, மருத்துவ ஆவணம் வாங்க வந்தது குறித்து நட்புடன் கூறினார். இந்த திடீர் நட்பை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட மூவேந்திரனும், சிவாவும் ஆறுதல் கூறுவது போல பேசி 'இன்னொரு கட்டிங் போடலாமா' எனக்கேட்க, 'நான்தான் வாங்கித்தருவேன்' என மலையரசன் கூறியிருக்கிறார். 'உங்களிடம் பணம் இருக்கிற மாதிரி தெரியலையேண்ணே' என மூவேந்திரன் கேட்க, 'அண்ணனிடம் இல்லாத பணமா. எவ்வளவு வேண்டும் என்றாலும் வாங்கிக்கொள்' என போதையில் கூறினார். இதற்கிடையே வழியில் சிவா இறங்கிக்கொண்டார்.
ஆன்லைன் விளையாட்டு
ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்த மூவேந்திரனுக்கு பணம் தேவைப்பட்டது. பேச்சு கொடுத்து மலையரசனின் ஜிபேயின் ரகசிய எண்ணை தெரிந்துக்கொண்டார். 'ஆயிரக்கணக்கில் பணம் கேட்டால் மலையரசன் தரமாட்டார். அவரை எரித்துக்கொன்றுவிட்டு பணத்தை எடுத்துக்கொள்ளலாம்' என திட்டமிட்டு ரிங் ரோடு மண்டேலா நகரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டார்.
பின்னர் இருவரும் ரிங் ரோடு ஓட்டல் பகுதியில் ஆட்டோவில் இருந்தவாறே மது அருந்தினர். அளவுக்கு அதிகமான போதையில் சுயநினைவை இழந்த மலையரசனை ஈச்சனோடை பகுதிக்கு அழைத்துச்சென்று பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தார். இதுகுறித்து நண்பர் சிவாவுக்கு தகவல் தெரிவிக்க, வெளியே சொல்லாமல் இருக்க ரூ.30 ஆயிரம் வேண்டும் எனக்கேட்டு மிரட்டினார். மலையரசனிடம் இருந்து எடுத்த 80 ஆயிரத்தில் இருந்து ஜிபே மூலம் சிவாவுக்கு அனுப்பினார். இதன் அடிப்படையில் கொலையை மறைத்தற்காக சிவாவையும் கைது செய்தோம்.
இவ்வாறு கூறினர்.