/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாசகர்கள் எண்ணிக்கை இரட்டிப்பான சிம்மக்கல் நுாலகம்
/
வாசகர்கள் எண்ணிக்கை இரட்டிப்பான சிம்மக்கல் நுாலகம்
வாசகர்கள் எண்ணிக்கை இரட்டிப்பான சிம்மக்கல் நுாலகம்
வாசகர்கள் எண்ணிக்கை இரட்டிப்பான சிம்மக்கல் நுாலகம்
ADDED : டிச 08, 2025 06:10 AM

மதுரை: மதுரை சிம்மக்கல் மாவட்ட மைய நுாலகம் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடைந்து ஓராண்டு ஆகியும் இளம் வாசகர்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாதபோதும் வாசகர்களின் எண்ணிக்கை 6 மாதங்களில் இரட்டிப்பாகி உள்ளது.
மதுரை சிம்மக்கல்லில் 1952 ஆண்டில் துவங்கிய நுாலகத்தில் பழமையான அரிய நுால்கள், சிறுவர் இதழ்கள் என 2 லட்சத்து 44 ஆயிரம் நுால்கள் உள்ளன.
நுாலகத்தில் புதுப்பிப்பு பணிகள் அவசியம் என தினமலர் நாளிதழ் தொடர்ந்து வலியுறுத்தியதால் கடந்தாண்டு மே முதல் ரூ.86.40 லட்சம் மதிப்பில் பணிகள் துவங்கி டிச.1 ல் நிறைவடைந்தன.
நுாலக வளாகத்தில் பேவர் பிளாக் கற்கள் பதித்து, டூவீலர் பார்க்கிங், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிப்பறை வசதி, ஆர்.ஓ., குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இங்கு 42 ஆயிரத்து 733 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
கடந்த மார்ச்சில் 34 ஆயிரம் பேராக இருந்த வாசகர் எண்ணிக்கை அக்டோபரில் 83 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஆனால் போட்டித்தேர்வு மாணவரின் தினசரி வருகை 50 பேராகவே உள்ளது.
நாட்டுப்புற கலைப்பிரிவு மேல்தளத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் பயன்படுத்தும் பம்பை, உறுமி உள்ளிட்ட இசைக் கருவிகள், பிரத்யேக உடைகள், ஆபரணங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளன. தமிழக நாட்டுப்புற கலைஞர்களின் புகைப்படங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சிம்மக்கல் சுகன்யா: சி.ஏ., தேர்வுக்கு தயாராக இந்த நுாலகம் பயனுள்ளதாக உள்ளது. கலைஞர் நுாலகத்தில் புத்தகத்துடன் செல்ல அனுமதி இல்லாததால் வளாகத்தில் படிக்கும் சூழல் இருந்தது.
ஆனால் இங்கு நம் புத்தகங்களை எடுத்து வந்து படிக்க கட்டுப்பாடு இல்லாததது உதவியாக உள்ளது என்றார்.
வில்லாபுரம் மணிகண்டன் : புதுப்பிப்பு பணிகளுக்கு பிறகு படிக்கும் சூழல் அருமையாக உள்ளது. போட்டித்தேர்வு உட்பட அனைத்து தேர்விற்கான புத்தகங்கள், பள்ளி பாடநுால்கள் உள்ளன. மின்தடை நேரங்களில் சிரமம் உள்ளது என்றார்.
மாவட்ட நுாலக அலுவலர் பாலசரஸ்வதி கூறுகையில், ''போட்டித்தேர்வுக்கு விரைவில் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. மின்தடையை சமாளிக்க ஜெனரேட்டர் பொருத்த உள்ளோம்' என்றார்.

