/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மருத்துவ மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பாடம்; மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் சர்ச்சை
/
மருத்துவ மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பாடம்; மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் சர்ச்சை
மருத்துவ மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பாடம்; மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் சர்ச்சை
மருத்துவ மாணவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் பாடம்; மதுரை அரசு மருத்துவக்கல்லுாரியில் சர்ச்சை
ADDED : செப் 29, 2024 06:55 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் பழைய மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கில் சமூக ஆர்வலர்கள் பேசியதால் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.
பழைய மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி அல்லது அரசு மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் மருத்துவ மாணவர்களுக்காக மாதந்தோறும் தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு நடத்தப்படுகிறது. நேற்று அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் விழுதுகள் 84 என்ற பெயரில் 1984ல் படித்த டாக்டர்கள் சார்பில் தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு நடந்தது.
திருநங்கைகள், பாலின அடையாளப்படுத்துதல் உட்பட பல்வேறு தலைப்புகளில் (எல்.ஜி.பி.டி.கியூ.ஐ.ஏ.) சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மனநல பேராசிரியர் ராஜசுந்தரி, மதுரை சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் சதீஷ்குமார், மதுரையைச் சேர்ந்த டாக்டர் கவி, சமூக ஆர்வலர்கள் அழகுஜெகன், செந்தில்குமார் ஆகியோர் பேச உள்ளதாக மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி டீன் செல்வராணிக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த கருத்தரங்கில் சமூக ஆர்வலர் அழகுஜெகன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த கல்லுாரி நிர்வாகிகள் 'சமூக ஆர்வலர்கள் பேசுவதற்கு அனுமதியில்லை' என்று கூறி 'மைக்'கை அணைத்து விட்டு மாணவர்களை வகுப்பறைக்கு செல்ல அறிவுறுத்தினர்.
இதுகுறித்து அழகுஜெகன் கூறுகையில் ''அரசு மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு எல்.ஜி.பி.டி.கியூ.ஐ.ஏ, சமூகத்தினருக்கான அங்கீகாரம் தருவதாக கூறுகிறது. கருத்தரங்கு நடத்துவதற்கு அனுமதி பெற்ற நிலையில் பாதியில் அனுமதி மறுக்கப்பட்டதோடு நிகழ்ச்சி முடிவதற்கு முன்பாகவே வெளியேற்றப்பட்டோம்'' என்றார்.
பேசவைத்தது தவறு
கல்லுாரி டீன் செல்வராணி கூறியதாவது:
தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கில் டாக்டர்கள், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்துவதற்கு அனுமதி உண்டு.
டாக்டர் அல்லாதோர் மருத்துவம் பற்றி பேசுவதற்கு அனுமதியில்லை. கருத்தரங்கில் பாலினம் தொடர்பாக அறிவியல் ரீதியாக பேசுவதற்கு 5 பேருக்கு அனுமதி கேட்டனர். அதில் 3 பேர் டாக்டர்கள். எனவே அவர்கள் மட்டும் பாலினம் தொடர்பாக மருத்துவ அறிவியல் ரீதியாக பேசலாம். டாக்டர் அல்லாத 2 பேர் பேசுவதற்கு அனுமதி தரமுடியாது என தெரிவித்த போது ஒத்துக் கொண்டனர்.
அதற்கு நேர் மாறாக கருத்தரங்கில் அவர்களை பேசவைத்தது தவறு. அதனால் இறுதியாண்டு மருத்துவ மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களை மட்டும் வகுப்பறைக்கு செல்ல உத்தரவிட்டோம் என்றார்.