/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குழந்தைகளின் நுரையீரலை குறிவைக்கும் உதிரி பாகங்கள்; மதுரை அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து சிகிச்சை
/
குழந்தைகளின் நுரையீரலை குறிவைக்கும் உதிரி பாகங்கள்; மதுரை அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து சிகிச்சை
குழந்தைகளின் நுரையீரலை குறிவைக்கும் உதிரி பாகங்கள்; மதுரை அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து சிகிச்சை
குழந்தைகளின் நுரையீரலை குறிவைக்கும் உதிரி பாகங்கள்; மதுரை அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து சிகிச்சை
ADDED : ஜன 18, 2025 07:03 AM

மதுரை அனுப்பானடி தம்பதியின் ஒரு வயது பெண் குழந்தை தொடர் காய்ச்சல், இருமலால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஸ்கேன் பரிசோதனையில் மூச்சுக்குழாயின் இடதுபுறத்தில் ஊக்கு போன்ற பொருள் இருந்தது தெரிந்தது.
மயக்கவியல் துறை இயக்குநர் கல்யாணசுந்தரம், நெஞ்சகநோய் மருத்துவப்பிரிவு துறைத்தலைவர் பிரபாகரன், குழந்தைகள் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் மீனாட்சிசுந்தரி தலைமையில் 'பிராங்கோஸ்கோப்' கருவி மூலம் 2 மணி நேர முயற்சிக்கு பின் மூச்சுக்குழாயில் இருந்த ரிமோட் காரின் எல்.இ.டி. பல்பு வெளியே எடுக்கப்பட்டது. தற்போது குழந்தை நலமுடன் உள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பாக மற்றொரு தம்பதியின் ஒருவயது ஆண் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த நிலக்கடலை இதே முறையில் அகற்றப்பட்டது. நவம்பரில் திண்டுக்கல் குட்டத்துப்பட்டி 8 மாத பெண் குழந்தையின் நுரையீரல் இடதுபக்க மூச்சுகுழாயில் சிக்கிய 'ரிமோட்' காரின் 'எல்.இ.டி., லைட்' 'பிராங்கோஸ்கோப்பி' கருவி மூலம் அகற்றப்பட்டது. இக்குழந்தை இருமல், மூச்சுத் திணறல், காய்ச்சலுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது.
'குழந்தைகள் விளையாடுவதற்காக வாங்கி கொடுக்கப்படும் பொம்மை, கார் போன்றவற்றில் எளிதில் கழன்று விழும் பாகங்கள் இருக்கிறதா என சரிபார்ப்பது பெற்றோரின் கடமை' என்கின்றனர் டீன் அருள் சுந்தரேஷ்குமார், நெஞ்சகநோய் மருத்துவப்பிரிவு துறைத்தலைவர் பிரபாகரன்.
அவர்கள் கூறியதாவது: குழந்தையின் மூச்சுக்குழாய் சிறிதாக இருப்பதால் மயக்க மருந்துடன் 'பிராங்கோஸ்கோப்பி' கருவியை செலுத்துவது சிக்கலான விஷயம். இங்கு அனுமதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளின் மூச்சுக்குழாயில் இருந்த நிலக்கடலை, ரிமோட் காரின் எல்.இ.டி., பல்பு 'பிராங்கோஸ்கோப்' கருவி மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. சிறு குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருட்களை வாயில் வைத்து சுவைக்கும் போது ஏதாவது உதிரி பாகங்கள் கழன்று விழும் போது அதை விழுங்கி விடுவர். அவை வயிற்றிலோ அல்லது நுரையீரல் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்ளவோ வாய்ப்பு உள்ளது. நீங்கள் தரும் விளையாட்டு பொருட்களை இதுபோன்று இல்லாமல் கவனமாக வாங்க வேண்டும். தவழும் நிலையில் உள்ள குழந்தைகள் தரையில் கிடக்கும் பொருளை எடுத்து விழுங்கி விடுவர் என்பதால் தரையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தொடர் இருமல் மற்றும் மூச்சு திணறல் தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்றனர்.