/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கெட்டுப்போன பால் சப்ளை; மதுரை ஆவின் பண்ணையில் திரண்ட பால் முகவர்கள்!
/
கெட்டுப்போன பால் சப்ளை; மதுரை ஆவின் பண்ணையில் திரண்ட பால் முகவர்கள்!
கெட்டுப்போன பால் சப்ளை; மதுரை ஆவின் பண்ணையில் திரண்ட பால் முகவர்கள்!
கெட்டுப்போன பால் சப்ளை; மதுரை ஆவின் பண்ணையில் திரண்ட பால் முகவர்கள்!
ADDED : ஆக 13, 2024 06:22 AM

மதுரை: மதுரையில் நேற்று வினியோகிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகளில் பல கெட்டுப்போனதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணைக்கு பொது மேலாளர் சிவகாமி உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் நாள் ஒன்றுக்கு 1.80 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதலும் 2 லட்சம் லிட்டருக்கு மேல் விற்பனையும் நடக்கிறது. பல்வேறு அளவுகளில் டெப்போக்களுக்கு வினியோகிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளில் ரூ.10க்கு விற்பனையாகும் 200 மில்லி லிட்டர் கவ் மில்க், ரூ.22 க்கு விற்பனையாகும் அரை லிட்டர் டிலைட் பால் பாக்கெட்டுகளை வாங்கிய வாடிக்கையாளர்கள் சிறிது நேரத்திலேயே கட்டி கட்டியாக உள்ளது எனக் கூறி டெப்போ முகவர்களிடம் இருநாட்களாக திரும்ப ஒப்படைத்தனர்.
அதை ஆவின் அலுவலகத்தில் முகவர்கள் ஒப்படைத்தனர். சில முகவர்களுக்கு 900 பாக்கெட்டுகளுக்கு மேல் கூட கெட்டுப் போயிருந்தது தெரியவந்தது.அதற்கு பதில் புதிய பால் பாக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டன. சில முகவர்களுக்கு புதிய பாக்கெட்டுகள் கிடைக்கவில்லை என புகார் எழுந்தது.
1967ல் நிறுவிய டேங்கில் விழுந்தது ஓட்டை
உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மொத்த பால் ஆவின் மெயின் அலுவலகத்தில் பதப்படுத்தி மைனஸ் டிகிரியில் குளிரூட்டப்பட்ட சைலோ டேங்குகளில் இரவு முழுவதும் ஸ்டோரேஜ் செய்யப்படும். இதற்காக 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு, 30 ஆயிரம் லிட்டரில் நான்கு, 60 ஆயிரம் லிட்டரில் இரண்டு என சைலோ டேங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆவினில் 7.1.1967ல் முதன்முதலாக நிறுவப்பட்ட 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சைலோ டேங்கு ஒன்றில் தான் தற்போது திடீர் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் பல ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப்போயுள்ளது. இதையறிந்த அலுவலர்கள் அப்பிரச்னையை சரிசெய்தனர். சம்பந்தப்பட்ட அந்த டேங்க்கை பயன்படுத்த தகுதி இல்லாதது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாததால் தான் இதுபோன்ற சைலோ டேங்குகளில் பழுது ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் டைரி, இன்ஜினிரியங், லேப் ஆகிய பிரிவுகளுக்கு இடையே உரிய ஒருங்கிணைப்பு இல்லாததே என ஊழியர்கள் தெரிவித்தனர்.
இப்பிரச்னை குறித்து ஆவின் பொதுமேலாளர் சிவகாமி கூறுகையில், பால் கெட்டுப்போன விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோன்ற பிரச்னை இனி ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

