/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வெறிச்சோடின
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வெறிச்சோடின
ADDED : அக் 09, 2025 05:32 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சி வார்டு 17, 21 பகுதி மக்களுக்காக உசிலம்பட்டியில் தனியார் மண்டபத்திலும், செல்லம்பட்டியில் நாட்டாமங்கலம் ஊராட்சி பகுதி மக்களுக்காக நாட்டாமங்கலம் ஆதிசிவன் கோவில் மண்டபத்திலும் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை நடந்த முகாமில் உசிலம்பட்டியில் 17 துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் 173 மனுக்கள் மட்டுமே கொடுத்துள்ளனர்.
இதில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 46 மனுக்கள், நகராட்சிக்கு 40 மற்றும் வருவாய்த்துறையில் 38 மனுக்கள் வந்துள்ளன. மற்ற அனைத்து துறைகளுக்கும் ஒற்றைப்படையில்தான் மனுக்கள் வந்துள்ளன.
நாட்டாமங்கலத்தில் நடந்த முகாமில் 54 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டு அதில் 49 மனுக்களை மட்டுமே ஏற்றுக்கொண்டனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'ஏற்கனவே இங்கு நடத்திய முகாம்களில் பெற்ற மனுக்கள் குறித்து ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் முகாம்களில் மனுக்கொடுக்க மக்கள் ஆர்வம் காட்டுவர். அந்த மனுக்களில் பல நிலுவையில் உள்ளதால், அலுவலகப்பணிகளும் நடைபெறாத நிலையில், அரசு அலுவலகங்களில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.