/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிவுநீரால் தத்தளிக்கும் பகுதிதான் 'ஸ்டார்' நகராம்
/
கழிவுநீரால் தத்தளிக்கும் பகுதிதான் 'ஸ்டார்' நகராம்
கழிவுநீரால் தத்தளிக்கும் பகுதிதான் 'ஸ்டார்' நகராம்
கழிவுநீரால் தத்தளிக்கும் பகுதிதான் 'ஸ்டார்' நகராம்
ADDED : ஜூலை 16, 2025 01:43 AM

மேலுார், : மேலுார் ஸ்டார் நகரில் கால்வாய் வழியாக கழிவுநீர் வெளியேறாமல் ரோட்டில் தேங்குவதால் பொது மக்களின் சுகாதாரம் கேள்விக் குறியாகி வருகிறது.
மேலுார் நகராட்சியின் ஸ்டார் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள முதல் தெருவில் 2 மாதங்களுக்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. முறையாக திட்டமிடாததால் கழிவு நீர் வெளியேறாமல் நிரந்தரமாக தேங்கி நிற்கிறது. நகராட்சி அதிகாரிகளிடம் கழிவு நீரை வெளியேற்றி தரும்படி கூறினால், பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கழிவுநீர் தேங்கிய ரோட்டில் குடிநீர், ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் வர மறுக்கின்றன.
அப்பகுதி ராஜமாணிக்கம் கூறியதாவது : கழிவுநீர் தேங்காமல் வெளியேறும் வகையில் கால்வாய் கட்டப்படவில்லை. கால்வாயை சமதளமாக கட்டியதால் நிரந்தரமாக தேங்குகிறது. அதில் கொசு உற்பத்தியாகி, தொற்றுநோயால் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுகிறது. வீடுகளில் இணைக்கப்பட்ட குழாய்கள் வழியாக கழிவு நீர் ரோட்டில் வெளியேறி தேங்கி கிடக்கிறது. மக்கள் கழிவு நீரில் நடந்து செல்வதால் தொற்று நோய்க்கு ஆளாகிறோம். துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடாகவும் காணப்படுகிறது.
கால்வாயை உயரமாக கட்டியதால் வீடும், ரோடும் பள்ளமாகி விட்டது. கழிவு நீரும், மழை நீரும் ரோட்டில் இருந்து வீட்டுக்குள் செல்கிறது. அதனால் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறோம். நகராட்சி அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவே இல்லை. மாவட்ட நிர்வாகம் கழிவுநீரை வெளியேற்ற சுகாதாரத்தை பேண, நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில், கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் தேங்காமல் வெளியேறவும், கழிவு நீரை பட்டாளம் கண்மாய்க்கு கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.