/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீண்டும் முதலில் இருந்து...: மதுரை சின்ன உடைப்பு மக்கள் போராட்டத்தை துவக்கினர்
/
மீண்டும் முதலில் இருந்து...: மதுரை சின்ன உடைப்பு மக்கள் போராட்டத்தை துவக்கினர்
மீண்டும் முதலில் இருந்து...: மதுரை சின்ன உடைப்பு மக்கள் போராட்டத்தை துவக்கினர்
மீண்டும் முதலில் இருந்து...: மதுரை சின்ன உடைப்பு மக்கள் போராட்டத்தை துவக்கினர்
ADDED : டிச 05, 2024 06:14 AM

அவனியாபுரம்: மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் சின்ன உடைப்பு கிராம மக்கள் நேற்று முதல் மீண்டும் தொடர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை துவக்கி உள்ளனர்.
மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக விமான நிலையம் அருகே உள்ள சின்ன உடைப்பு, அயன்பாப்பாக்குடி, பரம்புபட்டி உள்பட 6 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டது. சின்ன உடைப்பு கிராமத்தினர், தங்களுக்கு மாநகராட்சி பகுதியில் 3 சென்ட் இடமும், வீடும் கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்காக நவ. 13 முதல் ஏழு நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
வீடுகள், நிலங்களை கையகப்படுத்த வந்த வாகனங்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டனர். சமாதானம் பேசிய அதிகாரிகளிடம் அப்பகுதியினர் தங்கள் கோரிக்கைகளாக 3 சென்ட் மனை, வீடு, கோயில், பள்ளிக்கூடம், மயான வசதியை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
நவ. 20ல் கிராமத்தினர் சார்பில் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'அரசு தரப்பில் சட்டம், விதிகளைப் பின்பற்றாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதாரர்களை வெளியேற்ற இடைக்கால தடை விதிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டார்.
வரும் டிச. 11ல் இவ்வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், நேற்று முதல் சின்ன உடைப்பு மக்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளனர். அவர்கள் கூறுகையில், ''2009 கணக்கெடுப்பின்படி 2022ல் இழப்பீடு வழங்கப்பட்டது. எங்களுக்கு 2013 ம்ஆண்டு நில எடுப்பு சட்டப்படி கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். வீடுகள், நிலங்களை இழக்கும் தங்களுக்கு அரசு 3 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்து, மீள் குடியேற்ற குடியிருப்புகளுடன், அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேனர்களுடன் அமர்ந்தனர்.