/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநில அரசே புதிய ஓய்வூதியக் குழு அமைக்க பணியாளர்கள் பரிந்துரை தற்காலிக ஏற்பாடாக அமைக்க புதுமை யோசனை
/
மாநில அரசே புதிய ஓய்வூதியக் குழு அமைக்க பணியாளர்கள் பரிந்துரை தற்காலிக ஏற்பாடாக அமைக்க புதுமை யோசனை
மாநில அரசே புதிய ஓய்வூதியக் குழு அமைக்க பணியாளர்கள் பரிந்துரை தற்காலிக ஏற்பாடாக அமைக்க புதுமை யோசனை
மாநில அரசே புதிய ஓய்வூதியக் குழு அமைக்க பணியாளர்கள் பரிந்துரை தற்காலிக ஏற்பாடாக அமைக்க புதுமை யோசனை
ADDED : செப் 05, 2025 11:41 PM
மதுரை: அரசுப் பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதியம் 2003 முதல் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் 6.24 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
மத்திய அரசு புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இவை எதையும் அரசுப் பணியாளர்கள் ஏற்காத நிலையில், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு கருத்து கேட்டு வருகிறது.
இக்குழுவிடம் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்சங்க மாநில தலைவர் மணிவண்ணன், பொதுச் செயலர் குமார் புதுமை திட்டத்தை பரிந்துரைத்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டமே ஏற்க கூடியது. அது நிதிச்சுமை என கருதினால், பழைய, பங்களிப்பு, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டங்களில் சிறந்த அம்சங்களை கொண்டு தமிழக அரசே தற்காலிக ஏற்பாடாக மாநில ஓய்வூதிய பென்ஷன் திட்டத்தை அறிவிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:
* 25 ஆண்டுகள் பணிக்காலம் முடித்தால் முழுஓய்வூதிய தகுதி. அதற்கு குறைவாக இருந்தால் விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் கணக்கிடலாம். (ஒருங்கிணைந்த திட்டத்திலும் 25 ஆண்டு என பரிந்துரைத்துள்ளனர்).
* 60 வயதில் 25 ஆண்டுகளை முடிப்பவருக்கு கடைசி 12 மாத ஊதிய சராசரியில் 35 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கலாம். (பழைய திட்டத்தில் 50 சதவீதம் உள்ளது).
* ஓய்வூதியம் துவங்கி ஒவ்வொரு 5 ஆண்டு முடிவிலும் 5 சதவீதம் அதிகரித்து சென்றால் 75 வயதில் ஓய்வூதியம் 50 சதவீதத்தை எட்டும்.
* மாநில ஓய்வூதிய திட்டத்தில் அரசு பணியாளர்களிடம் ஊதியத்தில் 10 சதவீதமும், அரசு பங்களிப்பாக 20 சதவீத தொகையையும் பொது நிதிக்காக (கார்பஸ் பண்ட்) பிடித்தம் செய்ய வேண்டும்.
* பணியாளரிடம் பிடித்தம் செய்யும் 10 சதவீத தொகையை, ஓய்வு பெறும்போது வட்டியுடன் அவருக்கு வழங்க வேண்டும். (ஒருங்கிணைந்த திட்டத்தில் 10 சதவீத தொகையை ஓய்வு பெறும்போது திருப்பி வழங்குவதில்லை.)
* மத்திய அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்திய பணிக்கொடை திட்டத்தை, இப்புதிய மாநில திட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
* குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் பெற பணிக்காலம் 10 ஆண்டுகள், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
* 1.4.2003க்கு பின் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றோரில் 65 வயது நிரம்பியவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கவும், 70 வயது நிரம்பியவர்களுக்கு அடிப்படை ஓய்வூதியத்தில் 40 சதவீதம் வழங்கலாம்.
* பணியாளர் பங்களிப்பு தொகையில் 25 சதவீதம் அளவுக்கு பணியாளர் முன்பணம் வழங்க வேண்டும்.
* பணியாளர் ஓய்வூதியத்தில் 60 சவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.
இதற்காக தமிழ்நாடு ஓய்வூதிய நிதிமேலாண்மை வாரியத்தை, அரசு கருவூல கணக்குத்துறை கமிஷனர் தலைமையில் உருவாக்கலாம். இந்த அமைப்பு பிடித்தம் செய்யும் 10 சதவீத தொகை, மாநில அரசின் 20 சதவீத தொகையை, தேசிய வங்கிகளின் வட்டி விகிதத்தில் தனிநபர், வாகன, வீட்டுக் கடன்கள் வழங்கலாம். இதனால் பணியாளர்கள் பயன்பெறுவர். ஆணையத்திற்கும் வருவாய் கிடைக்கும். இதற்கு கருவூலத்துறை கட்டமைப்பை பயன்படுத்தினால் செலவினம் ஏற்பட வாய்ப்பில்லை. இவ்வாறு பரிந்துரைத்துள்ளனர்.