UPDATED : அக் 15, 2026 01:47 AM
ADDED : அக் 15, 2026 01:44 AM
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா வாகைகுளத்தில் உள்ள அய்யனார், கருப்பசாமி கோயிலில் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு சிலை எடுப்பு திருவிழா நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்த பக்தர்கள் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட களிமண் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய், புதன்கிழமைகளில் திருவிழா நடப்பது வழக்கம். பக்தர்கள் தாங்கள் வேண்டிக் கொண்டது நிறைவேறினால், ராணுவ வீரர், போலீஸ், விவசாயி, டிராக்டர், வீடு, பசுமாடு, குழந்தை, கை கால்கள் போல் சிலை செய்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். நேற்று மாலை ஊரின் மையப் பகுதியில் இருந்து சிலை எடுத்து ஊர்வலம் தொடங்கியது. பக்தர்கள் ஊரிலுள்ள அம்மன் கோயிலை சுற்றி வந்து அய்யனார் பாலம் பகுதிக்கு சென்று தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
