ADDED : ஜூலை 16, 2025 01:06 AM
மதுரை :  மதுரை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வு மருத்துவப்பிரிவில் உள்ள நீராவி குளியல் இயந்திரம் 4 மாதங்களாக செயல்படாதது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது இந்த இயந்திரம் மாற்று முறையில் செயல்படுத்தப்படுகிறது.
நேரடியாக மின்சாரம் மூலம் நீராவி உருவாக்கப்பட்டு இயந்திரத்திற்குள் விடப்பட்டது.  யோகா, நேச்சுரோபதி துறையின் இணை இயக்குநர் டாக்டர் மணவாளன் அறிவுரையின் படி தற்காலிகமாக குக்கர் மூலம் நீராவி உருவாக்கப்பட்டு இயந்திரம் செயல்படுத்தப்பட்டது.
துறைத்தலைவர் நாகராணி நாச்சியார் கூறியதாவது: எலக்ட்ரிக் அடுப்பில் குக்கரை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி மூடியை ஒரு குழாயுடன் இணைத்து அதிலிருந்து வெளிவரும் நீராவியானது இயந்திரத்திற்குள் விடப்படுகிறது. இதில் நோயாளிகளின் தேவைக்கேற்ப ஓமத்தைலம், யூக்லிப்டஸ், லெமன்கிராஸ், பெப்பர்மின்ட், துளசி தைலம் என சில துளிகள் சேர்த்து கொதிக்கவிடும் போது அதிலிருந்து வரும் நீராவி கூடுதல் புத்துணர்வு தருகிறது என்றார்.

