ADDED : செப் 28, 2026 12:58 AM

மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் ரத்தப்புற்றுநோய் மற்றும் ஸ்டெம் செல் சிகிச்சை குறித்த விழிப்புணர்வு நடந்தது.
ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் குணமடைந்த விதம் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு குறித்து பேசினர். அவர்களுக்கு டாக்டர்கள் சான்றிதழ்களை வழங்கினர்.
டாக்டர் ரமேஷ் கூறியதாவது: சமூகத்தில் ரத்தப்புற்றுநோய் குறித்த பயம் இன்றளவும் இருந்து வருகிறது. சினிமாக்களில் காட்டுவதை போன்று உயிர்குடிக்கும் நோயாக பார்க்கப்படுகிறது. இன்றைய நவீன மருத்துவ உலகில் அவை முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒன்றாக மாறி விட்டது. அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக ரத்த புற்றுநோயில் இருந்து குணமானோர் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
ரத்தப்புற்றுநோயின் வகையறிந்து அதற்கேற்ற ஸ்டெம் செல் சிகிச்சை வழங்கப்படுகிறது. தானம் செய்வோரிடம் இருந்து ஸ்டெம் செல்கள் பெறப்பட்டு நோயாளிகளுக்கு ரத்தம் ஏற்றுவது போல ஏற்றப்படு வதால் குணப்படுத்த முடிகிறது என்றார். சென்னை அப்போலோ டாக்டர் ஜோஸ் ஈசோவ் உட்பட பலர் பங்கேற்றனர்.
