/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஹாக்கி பயிற்சியில் அசத்தும் மாணவிகள்
/
ஹாக்கி பயிற்சியில் அசத்தும் மாணவிகள்
ADDED : மே 30, 2025 03:58 AM

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ( எஸ்.டி.ஏ.டி., ) மதுரை எல்லீஸ்நகர் ஹாக்கி மைதானத்தில் கோடை இலவச ஹாக்கி பயிற்சியில் பள்ளி, கல்லுாரி மாணவிகள் 70 பேர் பயிற்சி பெற்று அசத்தினர்.
மதுரை மாவட்ட ஹாக்கி சங்கம், வைகை ஹாக்கி அகாடமி ஏற்பாடுகளை செய்தது. அகாடமி நிறுவனர் ஏ.ஜி. கண்ணன் கூறியது: மே 1 முதல் 29 வரை பயிற்சியாளர்கள் நடராஜன், மாயன் பயிற்சி அளித்தனர். கப்பலுார் அரசு கள்ளர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மாயன், மாணவிகளை இலவச பஸ்சில் அழைத்து வந்து பயிற்சி அளித்தார். அமலா கான்வென்ட், எஸ்.பி.ஓ., பள்ளி, செவன்த்டே, பாத்திமா கல்லுாரி மாணவிகளும் பயிற்சி பெற்றனர். காலையில் கொண்டைக்கடலை, பாசிப்பயறு, முட்டை வழங்கினோம். நிறைவுநாளில் டீ சர்ட் வழங்கினோம். இவர்களை ஒருங்கிணைத்து வைகை அகாடமி மூலம் போட்டிகளில் பங்கேற்க வைக்க உள்ளோம் என்றார்.
பயிற்சி பெற்ற மாணவிகள் கூறியது:
பெண்கள் வரவேண்டும்
ஜோவினா டெப்னி: திருவண்ணாமலை விளையாட்டு விடுதியில் தங்கி பிளஸ் 1 படிக்கிறேன். எல்லீஸ்நகரில் வீடு. விடுமுறையில் வீட்டுக்கு வந்ததால் தினமும் இங்கு ஹாக்கி பயிற்சி பெறுகிறேன். அதிகாலை 5:30 மணிக்கு வந்து 'வார்ம் அப், பிராக்டீஸ் மேட்ச்' என பயிற்சி பெறுவது சந்தோஷமாக உள்ளது. தமிழக ஹாக்கியில் பெண்கள் பங்கேற்பு குறைவு. இன்னும் நிறைய பெண்கள் வரவேண்டும். தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்திற்கான தேசிய ஹாக்கி போட்டியின் 17 வயது பிரிவில் தமிழக அணியின் கேப்டனாக பங்கேற்று காலிறுதியில் தோல்வியடைந்தோம். கொல்லத்தில் நடந்த தென்மண்டல போட்டியில் கேப்டனாக பங்கேற்று 2ம் இடம், முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டியில் 2ம் இடம், பள்ளிக்கல்வித்துறையின் மாநில போட்டியில் முதலிடம் பெற்றோம். கேப்டனாக இருக்கும் போது கூடுதல் விளையாட்டு அறிவு இருக்க வேண்டும். தற்போது தமிழக அணியில் உள்ளேன். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே என் ஆசை.
பிடித்த விளையாட்டு
ஜோனிஷா : அப்பா மரியஜான்பால் தேசிய ஹாக்கி வீரர், சர்வதேச அம்பயர். அம்மா தீபா தடகள வீரர். இரண்டாம் வகுப்பு படிக்கும் போதே எல்லீஸ்நகர் மைதானத்தில் ஹாக்கி பயிற்சியில் சேர்ந்தேன். தினமும் அதிகாலை 5:30 முதல் 7:30 மணி, மாலை 4:30 முதல் 6:30 மணி வரை பயிற்சி பெறுகிறேன். இதன் மூலம் விளையாட்டு விடுதியில் சேர தேர்வாகியுள்ளேன். ஹாக்கிதான் எனக்கு பிடித்த விளையாட்டு.
விளையாட்டு அவசியம்
சுஷ்மிதா தேவி, இல்லத்தலைவி: ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். இந்த மைதானம் எனக்கு இன்னொரு வீடு போன்றது. பள்ளிப்படிப்பு முடிக்கும் வரை தினமும் அப்பாவுடன் பயிற்சிக்கு வருவேன். திருமணமாகி கேரளாவில் வசிக்கிறேன். மதுரை வரும் போதெல்லாம் எல்லீஸ் நகர் மைதானம் வந்து ஹாக்கி விளையாடினால் மனநிறைவு கிடைக்கிறது. திருமணத்திற்கு பின்பும் பெண்களுக்கு விளையாட்டும், பயிற்சியும் அவசியம்.